சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தாத மும்பை இந்தியன்ஸ் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐ.பி.எல் 2020 தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இன்றையப் போட்டியில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அந்த அணிக்கு பாதிப்பு இல்லை. ஆனால் சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் அந்த அணிக்கு இன்றையப் போட்டி வாழ்வா? சாவா? என்றாகவே இருக்கும்.
அபுதாபியில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் இன்றையப் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். மேலும் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவிற்கு இன்றையப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக டீ-காக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் 4 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இன்றையப் போட்டியில் சோபிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடியான ஆட்டம் இன்றையப் போட்டியில் இல்லாமல் போனது. பொல்லார்டு மட்டும் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடனும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்