ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. 56 லீக் ஆட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் சுவாரஷ்யங்களின் தொகுப்பு.
கொரோனோ வைரஸ் பரவலால் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெ தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தீவிர முயற்சியால் வெற்றிகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொண்டாடப்பட்டு வருகிறது. எட்டு அணிகளும் லீக் சுற்று ஆட்டங்களில் 56 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான கே.எல். ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை தன் வசப்படுத்தியுள்ளார். ஐந்து அரைசதம், 1 சதம் என நடப்பு தொடரில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி நட்சத்திர வீரராக ஜொலித்துள்ளார்.
அதே போல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா கைப்பற்றியுள்ளார். 14 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துள்ளார்.
ஐபிஎல் போட்டி என்றாலே சிக்ஸர்களை பறக்கவிடுவதில் வீரர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவுவது சாதாரணம் அந்தவகையில் லீக் சுற்றுகள் முடிவில் இஷான் கிஷன், மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 26 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளனர்.
அதிக அரைசதம் அடித்த வீரர்களில் கே.எல். ராகுல் ஐந்து அரைசதமும், அதிக சதம் விளாசிய வீரர்களில் தவன் இரண்டு சதங்கள் விளாசியும் இந்த சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
நடப்பு தொடரின் அதிவேக அரைசதத்தை பஞ்சாப் வீரர் பூரண் பதிவு செய்துள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் பூரன்.
நடப்பு தொடரில் இதுவரை ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிவேக சதத்தை பஞ்சாப் வீரர் மயக் அகர்வால் 45 பந்துகளில் பதிவு செய்து அசத்தியுள்ளார். 10 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி இந்த சாதனையை எட்டிப்பிடித்துள்ளார்.
லீக் சுற்றுகளின் முடிவில் அதிகபட்ச ஸ்கோரை கே.எல்.ராகுல் பதிவு செய்துள்ளார். பெங்களூரு அணிக்காக 132 ரன்கள் அடித்ததே நடப்பு தொடரில் பதிவாகியுள்ள தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனையாகும்.
பந்துவீச்சில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் தமிழக வீரரும் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளருமான வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக நான்கு ஓவர் பந்துவீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியதே அதிகபட்சமாக அமைந்துள்ளது.
அதிக தூரம் சிக்ஸ அடித்த வீரர்களின் வரிசையில் 106 மீட்டர் அடித்த பஞ்சாப் அணி வீரர் பூரன் முதல் இடத்தில் உள்ளார்.
மிக வேகமாக பந்துவீசியதில் டெல்லி அணி வீரர் ஆன்ரிச் நாட்ஜி 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி முதல் இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் முதல் நான்கு அதிக வேக பந்துவீச்சையும் நாட்ஜி வீசியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்