ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை வாய்ப்பை பறிகொடுத்தது சென்னை அணி. ஜாதவ்வின் மோசமான ஆட்டத்தால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபி எல் கிரிக்கெட் தொடர் முதல் சுற்றின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. தனது ஆறாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் பியூஸ் சாவ்லாவிற்கு பதில் கரண் சர்மா களமிறங்கினார். கொல்கத்தா அணி வீரர்கள் மாற்றமின்றி களமிறங்கினர்.
கொல்கத்தா அணியின் வழக்கத்துக்கு மாறாக சுனில் நரைனுக்கு பதிலாக ராகுல் த்ரிபாதியும், சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய கில் 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய த்ரிபாதி நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸ விளாசி 81 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை தனி ஆளாக உயர்த்திக்காட்டினார்.
டெத் ஓவரில் பிராவோவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய கொல்கத்தா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் சேர்த்தது. பிராவோ 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் வாட்ஷன் - டு பிளஸி ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு - பிளஸி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராயுடு, வாட்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் எண்ணிக்கையை உயரித்தினார். அதிரடி காட்டிய வாட்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
13 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்த சென்னை அணி 101 ரன்கள் எடுத்திருந்தது. 7 ஓவர்களில் 67 ரன்கள் தானே தோனி களத்தில் இருக்கிறார் நிச்சயம் ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
வருண் சக்கரவர்த்தி பந்தில் தோனி போல்டாக ஆட்டம் தலைகீழாக மாறுவிட்டது. கேதர் ஜாதவின் மோசமான பேட்டிங்கால் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கொல்கத்தா அணியிடம் பறிகொடுத்தது. இறுதியில் சென்னை அணியால் 20 ஓவர்களுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சென்னை அணி சந்திக்கும் நான்காவது தோல்வி இதுவாகும். எனவே இனி வரும் போட்டிகள் அனைத்தும் சென்னைக்கு வாழ்வா சாவா போட்டியாகவே அமையவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.