16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. ஏலத்தில் கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் செலவழிக்க அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஐபிஎஸ் 16- வது சீசன் மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு மெகா ஏலமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நடப்பாண்டு மினி ஏலமாக நடத்தப்படுகிறது
ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குப் பதிலாக, புதிய வீரர்களை அணியில் சேர்க்க இந்த மினி ஏலத்தில் களமிறங்குகின்றனர்.மொத்தம் 991 வீரர்கள் ஏலத்திற்காக பதிவு செய்திருந்த நிலையில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் இதில், 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.405 வீரர்களில் இருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்த ஏலம் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தில் கூடுதலாக 5 கோடி ரூபாய் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 95 கோடி ரூபாயை பயன்படுத்தலாம். ஏலத்தில் பங்கேற்றுள்ள அணி நிர்வாகிகள் ஏலத்தின் போது கேப்டன்களிடம் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசித்துக் கொள்ளவும் முதல் முறையாக பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
Also Read: ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம் இதோ
கேன் வில்லியம்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மயங்க் அகர்வால், சிக்கந்தர் ராசா, ஜோடான் போன்ற வீரர்கள் அதிக ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.19 வீரர்களுக்கு அடிப்படை விலை 2 கோடியாகவும் 11 வீரர்களுக்கு அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை, ஆல் ரவுண்டர் இடத்தை நிரப்ப சாம் கரணையும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப மனிஷ் பாண்டேவையும் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தமிழ் நாட்டு வீரர்கள் சுமார் 5 பேர் வரை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, ஹைதராபாத் அணியிடம் 42 கோடியே 25 லட்சம் ரூபாயும், பஞ்சாப் அணியிடம் 32 கோடியே 20 லட்சம் ரூபாயும் உள்ளது. சென்னை அணியைப் பொறுத்தவரை 20 கோடியே 45 லட்சம் ரூபாய் கையிருப்பில் உள்ளது. குறைந்தபட்சமாக கொல்கத்தா அணியிடம் 7 கோடியே 5 லட்சம் ரூபாய் வரை ஏலத்தொகை உள்ளது.மேலும் மினி ஏலத்தில் வாய்ப்புக்காக முதல் தர கிரிக்கெட் வீரர்கள் 282 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் பூடான், நேபாளம், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Super Kings, IPL, IPL Auction, Mumbai