Home /News /sports /

உம்ரன் மாலிக்கின் 2 ஓவர் கோபாலின் 1 ஓவரால் தோற்ற சன் ரைசர்ஸ்- பழிதீர்த்த டேவிட் வார்னர்- டெல்லி ‘கில்லி’

உம்ரன் மாலிக்கின் 2 ஓவர் கோபாலின் 1 ஓவரால் தோற்ற சன் ரைசர்ஸ்- பழிதீர்த்த டேவிட் வார்னர்- டெல்லி ‘கில்லி’

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

கடந்த சீசனில் கொஞ்சம் கூட மரியாதை காட்டாது நடத்தப்பட்ட வார்னர் தன் முந்தைய அணியான சன் ரைசர்ஸுக்கு எதிராக பழித்தீர்ப்பு இன்னிங்சை ஆடி 58 பந்துகளில் 92 நாட் அவுட் என்று அபாரமாக ஆடியதோடு எதிர்முனையில் ஆடிய போவெலையும் அடி அடி என்று கொலவெறி ஊக்கமளிக்க போவெல் 35 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 67 ரன்களை எடுக்க 207 ரன்களைக் குவித்த டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 186/8 என்று மடக்கி அபார வெற்றி பெற்றனர்.

சன் ரைசர்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் 190 ரன்களுக்கும் மேலாக வாரி வழங்கியதற்குக் காரணம் மாறிப்போன பிட்ச்கள் என்றும் கூறலாம்.

இந்த வெற்றி மூலம் 5 வெற்றிகளுடன் டெல்லி 10 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு முன்னேற 2ம் இடத்தில் ஒரு கட்டத்தில் இருந்த சன் ரைசர்ஸ் தொடர் தோல்விகளினால் 6ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிட்ச்கள் பேட்டிங் பிட்ச்களாக மாறிவிட்டன, முன்பு கொஞ்சம் பசுமை நிரம்பியதாக இருந்த பிட்ச்கள் இப்போது அதிரடி மட்டைப் பிட்ச்களாக மாறியுள்ளன. இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர், இதில் பிரிதிவி ஷாவுக்குப்பதிலாக மந்தீப் சிங்கை கொண்டு வந்தது புரியாத புதிர். அவர் டக் அவுட் ஆனார்.

டேவிட் வார்னர், போவெல் விளாசல்: உம்ரன் மாலிக் வாரி வழங்கினார்:

இதில் உம்ரன் மாலிக், கார்த்திக் தியாகி போன்ற அதிவேக பவுலர்கள் நல்ல லெந்தை பராமரிக்கவில்லை எனில் சாத்துமுறை நடக்கும் என்பது வில்லியம்சனுக்குத் தெரிந்திருக்க வேண்டும், உம்ரன் மாலிக் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை கொடுத்தார், டி20-யில் அதிவேக பவுலிங் தேவையில்லை சாமர்த்தியமான பவுலிங் தேவை, ஸ்லோ ஒன், யார்க்கர்கள், ஸ்லோ பவுன்சர், நக்கிள் பந்து என்று பவுலர்கள் பலர் திறமையை வளர்த்துக் கொண்டிருக்க காட்டுத்தனமான வேகத்தில் ஒரு போதும் விக்கெட்டுகளை யாரும் கொடுக்க மாட்டார்கள், மாறாக அன்று ருதுராஜ் கெய்க்வாட் போட்டு பின்னி எடுத்தார் உம்ரன் மாலிக்கை, நேற்று டேவிட் வார்னர், போவெல் வெளுத்து வாங்கி விட்டனர்.

சதக்கூட்டணி அமைத்து விளாசித்தள்ளிய வார்னர்-போவெல் கூட்டணி- படம் ஐபிஎல் இணையதளம்


24 பந்துகளில் 9 பந்துகள் ரன் இல்லாத டாட் பால்கள் என்றால் மீதமுள்ள 15 பந்துகளில் 52 ரன்களை கொடுத்துள்ளார் என்று பொருள், இது மிக மிக மோசமான பவுலிங், ஃபேன்சி பவுலிங்கை வைத்துக் கொண்டு போட்டிகளை வெல்ல முடியாது. 15 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் கொடுக்கிறார் என்றால் அவர் ஸ்மார்ட் பவுலர் அல்ல. உம்ரனின் 2 ஓவர்கள் ஷ்ரேயஸ் கோபாலை ஒரு ஓவரில் ரிஷப் பண்ட் ஹாட்ரிக் சிக்சர்கள் பவுண்டரி விளாசியது ஆகியவற்றினால் டெல்லி அணி எழுச்சி கண்டது. ஆனால் அதேஓவரில் ரிஷப் பண்ட் வெளியே சென்ற ஃபுல்டாஸை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறிய போது 9 ஓவர்களில் 85/3 என்று டெல்லி சற்றே மடங்கியது.

அங்கிருந்து கேன் வில்லியம்சன் விட்டு விட்டார். முதல் தவறு ரிஷப் பண்ட் திணறிக்கொண்டிருந்தார் 9 பந்தில் 2 ரன்கள்தான் எடுத்திருந்தார், அவருக்குப் போய் லெக் ஸ்பின்னரைக் கொண்டு வந்து தவறிழைத்தார் கேன் வில்லியம்சன். 85/3-லிருந்து விக்கெட்டே விழவில்லை, அங்கிருந்து அடுத்த 11 ஓவர்களில் 122 ரன்களை சன் ரைசர்ஸ் விளாசியது.

டேவிட் வார்னர் 58 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 92 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கார்த்திக் தியாகியை பின்பக்கமாக ஃபைன் லெக்கில் அடித்த சிக்ஸ், வார்னர் பஞ்ச். அதே போல் கடைசி ஓவரை உம்ரன் மாலிக் வீச முதல் பந்து 154 கிமீ வேகப்பந்தை லாங் ஆஃப் மேல் போவெல் அடித்த சிக்ஸ் அதியற்புதம், அதோடு அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் 19 ரன்கள் வந்ததால் டெல்லி 207 ரன்களுக்குச் சென்றது. வைடு வகையில் 10 ரன்களை சன் ரைசர்ஸ் விட்டுக் கொடுத்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் உம்ரன் மாலிக்கோடு சான் அபாட் 4 ஓவர் 47 ரன்கள், ஷ்ரேயஸ் கோபால் 3 ஓவர் 34 ரன்கள். டாப் பவுலிங் என்றால் அது புவனேஷ்வர் குமார்தான்.

புவனேஷ்வர் குமார் உண்மையில் ஒரு சொத்துதான்,  4ஓவர் 25 ரன் 1 விக்கெட்.

சன் ரைசர்ஸ் சேசிங்- கலீல் அகமெட் அபாரம்- நிகோலஸ் பூரன், மார்க்ரம் வெற்றி முயற்சி:

208 ரன்கள் இலக்கை விரட்டிய சன் ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களில் கலீல் அகமதுவின் பந்து வீச்சில் வெளியேறினார். கேன் வில்லியம்சனை அருமையாக ஒரு ஆஃப் ஸ்டம்ப் ஸ்விங் பந்தில் வீழ்த்தினார் ஆன்ரிச் நார்ட்யே, அவர் 4 ரன்களில் அவுட். ராகுல் திரிபாதி (22), உண்மையில் ரன் வராத முட்டுக்கட்டைகளை அகற்ற நினைத்து அனைத்து வகையான ஷாட்களையும் ஆடினார், கடைசியில்  மிட்செல் மார்ஷ் பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7 ஓவர்களில் 37/3. பிறகு 9 ஓவர்களில் 48/3 என்று இருந்த போது ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

3 விக்கெட்டுகளை வெறும் 30 ரன்களுக்குக் கைப்பற்றிய கலீல் அகமட்.


10 ஓவர்களில் 145 ரன்கள் 7 விக்கெட்டுகள் கையில் இருக்கின்றன. ஆனால் நிகோலஸ் பூரன் விடுவோமா என்று ஆடினார் 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்தார், இவரும் மார்க்ரம் (42 ரன் 25 பந்து 4 பவுண்டரி 3 சிக்ஸ்) இணைந்து 60 ரன்களை 35 பந்துகளில் சேர்த்தனர். மார்க்ரம் கலீல் அகமதுவிடம் ஆட்டமிழந்தா. பிறகு அதிரடி மன்னன் சுஷாங்க் சிங் இறங்கி 10 ரன்கள் அடிப்பதற்குள் பூரன் மேலும் 27 ரன்களை விளாசினார். 15 ஓவர்களில் 134/5. கடைசியில் பூரனும் 18வது ஓவரில் தாக்கூர் பந்தில் ஆட்டமிழக்க, சன் ரைசர்ஸ் 186/8 என்று 21 ரன்களில் தோல்வி கண்டது.

உம்ரன் மாலிக்கின் அந்த 2 ஓவர்களில் வந்த 40 ரன்கள், மற்றும் தவறாக தடவிக்கொண்டிருக்கும் ரிஷப் பண்ட் கிரீசில் இருக்கும் போது வாகாக லெக் ஸ்பின்னரைக் கொண்டு வந்து 3 சிக்சர்கள் 1 பவுண்டரி கொடுத்தது. இந்த 62 ரன்களுக்குப் பதிலாக 40 ரன்களையே சன் ரைசர்ஸ் கொடுத்திருந்தால் வெற்றி இலக்கு கன கச்சிதமாக இருந்திருக்கும், இந்தக் கணக்கீடுதான் தவறாகிப் போனது, குறைந்தது ரிஷப் பண்ட்டை 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடிக்க விடமால் செய்திருந்தாலே வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியான 21 ரன்கள் என்பது சன் ரைசர்ஸின் வெற்றியாக மாறியிருக்கும். சிறு சிறு தவறுகள்தான் ஆனால் பெரிய விலையைக் கொடுக்கச் செய்து விட்டது. ஆட்ட நாயகன் டேவிட் வார்னர்.
Published by:Muthukumar
First published:

Tags: David Warner, Delhi Capitals, IPL 2022, SRH

அடுத்த செய்தி