பிசிசிஐ அடுத்த 2023-27 வர்த்தக சுழற்சி ஆண்டுக்கான மீடியா ரைட்ஸ் விற்பனையில் எதிர்பார்க்க முடியாத பிரமிப்பூட்டும் விதமாகக் கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதால் ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும் இது ஜாக்பாட் காலமாகும், ஐபிஎல் அணிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய பிரீமியர் லீகின் (ஐபிஎல்) அடுத்த சுழற்சிக்கான (2023-27) ஒரு அதிர்ச்சியூட்டும் ஊடக உரிமை ஒப்பந்தத்தைப் பெற்றது. 48,000 கோடி ரூபாய்க்கு மேல் மொத்தப் பேக்கேஜ், ஸ்டார் இந்தியாவிற்கு விற்கப்பட்ட கடைசி பேக்கேஜ் ரூ16,000 கோடி. ஊடக உரிமைகள் மூலம் பிசிசிஐயின் வருவாய் அபரிதமான அதிகரிப்பைக் கண்டது.
இதனையடுத்து ஐபிஎல் தொடரில் ஆடும் 10 அணிகளின் வருவாய் 100% அதிகரிக்கும் என்று வர்த்தக வட்டார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐபிஎல் 2022 மீடியா ரைட்ஸ் விற்பனை மூலம் 10 உரிமையாளர்களும் தலா ரூ.201.65 கோடி வருவாய் ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்து இப்போது ஐபிஎல் மீடியா உரிமைகள் கண்டபடி விற்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அணி உரிமையாளரும் ரூ.400 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடங்கப்பட்ட போது அது வீரர்களின் வளர்ச்சி, திறன் கண்டுப்பிடிப்பு மற்றும் கிரிக்கெட் வளர்ச்சி என்ற வர்ணம் பூசி வந்தது, பிசிசிஐ கணக்குகள் மத்திய ஆடிட்டுக்கு உரியதல்ல, மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் கீழ் பிசிசிஐ வராது, இந்நிலையில் உரிமையாளர்களின் வர்த்தகத்தை பெருக்கும் நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருவதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார், ஆகவே ஐபிஎல் கிரிக்கெட்டால் யாருக்கு பயன்? என்ற கேள்விக்கு விடை எளிதானதாக உள்ளது.
பிசிசிஐ மற்றும் உரிமையாளர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஊடகங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் வருவாயில் 50% உரிமையாளர்களிடையே விநியோகிக்கப்படுகிறது.
மீடியா ரைட்ஸ் என்ற பெயரில் இப்படி பணம் திரட்டப்பட்டால் நேரலை ஒளிபரப்பின் தரம், மற்றும் லட்சணம் எப்படி இருக்கும்? பவுலர் ஓடி வருவதற்குள் ஒரு விளம்பரத்தைப் போடுவார்கள், போட்ட பிறகு அடுத்த பந்துக்கு இடையில் இன்னொரு விளம்பரத்தைப்போடுவார்கள், மேட்சைப் பார்க்க விடமாட்டார்கள், தொலைக்காட்சித் திரையின் பக்கம், கீழ், மேல் என்று விளம்பரங்களால் இட்டு நிரப்பி கிரிக்கெட்டைப் பார்க்கும் அனுபவம் என்பதையே காலி செய்யப் போகிறார்கள்.
மீடியா மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாய்கள் தவிர, உரிமையாளர்கள் தங்கள் சொந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள், டிக்கெட் விற்பனை போன்றவற்றிலிருந்தும் பணம் சம்பாதிக்கிறார்கள். பிசிசிஐ மொத்தமாக புதிய ஊடக உரிமை ஒப்பந்தமான ரூ.48,390 கோடியின் பாதி 10 ஐபிஎல் உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Gujarat Titans, IPL, IPL 2022, RCB