• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • தோனி மட்டுமே பேட்டிங்கில் தடுமாறவில்லை: பிளெமிங்- சமாளிப்புன்னா இதுதான்

தோனி மட்டுமே பேட்டிங்கில் தடுமாறவில்லை: பிளெமிங்- சமாளிப்புன்னா இதுதான்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி தழுவியது, இதற்கு முக்கியக் காரணம் தோனியின் மந்தமான பேட்டிங், அவருக்கு பேட்டிங் மறந்து விட்டது. விளையாடாத கேப்டனாக இருக்கிறார்.

 • Share this:
  பவர் ப்ளேயில் 48/2 என்ற நிலையிலிருந்து அடுத்த 5 ஓவர்களுக்கு பவுண்டரியே வரவில்லை. தோனி 27 பந்துகளில் 18 ரன்கள் என்று தட்டுத்தடுமாறி திக்கி திணறி திண்டாடி வருகிறார். பேசாமல் நம்பர் 9-ல் இறங்கலாம். நேற்று கடைசியில் ஆவேஷ் கானிடம் எட்ஜ் ஆகி ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் வெளியேறினார். தோனியின் பேட்டிங் பிரச்சனைகளெல்லாம் பிட்சின் பிரச்சனை என்று சொல்லி விட வேண்டியதுதான். அதைத்தான் ஸ்டீபன் பிளெமிங் செய்கிறார்.

  தல ரசிகர்கள் அவர் ஆடினாலும் ஆடாவிட்டாலும் தல தலதான் கால் கால்தான் என்று பேசுவதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது புரிந்து கொள்ள முடிகிறது, ஒரு முன்னாள் கேப்டன், நல்ல பேட்ஸ்மென் சிறந்த கோச் ஸ்டீபன் பிளெமிங் தோனியின் பேட்டிங்குக்கு வக்காலத்து வாங்குவதை புரிந்து கொள்ள முடியவில்லை. விசுவாசம் என்பதைத் தாண்டி அதில் கிரிக்கெட் சமாச்சாரங்கள் எதுவும் இல்லை.

  அவர் இப்படித்தான் கூறுகிறார், “தோனி மட்டுமே திணறவில்லை. ஸ்ட்ரோக் ப்ளேவுக்கே கடினமான தினம். 136 ரன்கள் ஏறக்குறைய போதும் என்றுதான் ஆனது, ஆனால் பிக் ஷாட்களை ஆட முடியாத பிட்ச் ஆகும் இது. எனவே இரு அணிகளுமே திணறினர். இன்னொரு 10-15 ரன்களை எடுத்திருந்தால் மேட்ச் வின்னிங் ஸ்கோராக இருந்திருக்கும்.

  தோனியின் பேட்டிங்கில் அடிக்க வேண்டும் என்ற தீவிரம் இல்லை என்று கூற முடியாது, இரண்டு தவறுகளுக்குப்பிறகு கொஞ்சம் நிலை நிறுத்த வேண்டியிருந்தது. அவர்கள் பந்து வீச்சும் டெத்தில் நன்றாக வந்தது, ஆகவே கடினம்தான். அரையிறுதியில் தோற்பதை விட பிளே ஆஃப் தகுதிக்குப் பிறகு இரண்டு தோல்விகள் ஒரு விதத்தில் எச்சரிக்கைதான்” என்கிறார் பிளெமிங்.

  Also Read: சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி

  சீரியஸ் கிரிக்கெட், கடினமான டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை ஆடாமல் தோனியினால் நினைத்தபடிக்கு ஆட முடியாது என்பதே எதார்த்தம், அதை ஒப்புக் கொள்வதை விடுத்து விசுவாச சமாளிப்பு சமாளிப்பு விசுவாச பாணியில் பேசுகிறார் பிளெமிங்.

  நேற்று ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்த பிறகே சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் சோபையிழந்தது, ஒரு வீரரை மட்டும் நம்பியிருக்கும் அணியாகி விட்டது, சென்னை, கடைசியில் அம்பதி ராயுடு கொஞ்சம் தீவிரம் காட்டவில்லை எனில் சிஎஸ்கெ 100க்குள் தான் முடிந்திருக்கும். அஸ்வினையும் அக்சர் படேலையும் தொட முடியவில்லை. மாறாக சிஎஸ்கே பவுலிங் போடும் போது தீபக் சாகரை கட்டம் கட்டி வெளுத்தார் ஷிகர் தவான், மொத்தம் 4 பவுண்டரி 2 சிக்சர்களை தீபக் சாகர் விட்டுக் கொடுத்தார்.

  கடைசியில் கொஞ்சம் நடுவர் விளையாடப் பார்த்தார், வைடு ஒன்று கொடுக்கவில்லை, அப்படியும் டெல்லி வெற்றி பெற்றது. ஷிம்ரன் ஹெட்மையர் 18 பந்துகளில் 28 ரன்கள் விளாச டெல்லி அணி போராடித்தான் வென்றது என்று கூற வேண்டும்.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: