Home /News /sports /

3டி பிளேயர் என்று சொல்லி விஜய் சங்கர் காலியானார், இப்போது ஹர்திக் பாண்டியா 4டி பிளேயராம்

3டி பிளேயர் என்று சொல்லி விஜய் சங்கர் காலியானார், இப்போது ஹர்திக் பாண்டியா 4டி பிளேயராம்

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இந்தியன் பிரீமியர் லீக்கின் சமீபத்தில் முடிவடைந்த 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 28 வயதான ஹர்திக் பாண்டியா கேப்டனாக கோப்பையை வென்றதையடுத்து, முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் கிரண் மோர், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அறிமுக சீசனிலேயே ஹர்திக் பாண்டியா ‘3டி கிரிக்கெட் வீரராக’ இருந்து ‘4டி கிரிக்கெட் வீரராக’ பரிணமித்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

2021 சீசனில் காயங்கள் மற்றும் மோசமான ஃபார்மில் அவதிப்பட்ட பிறகு, மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை  விடுவிக்க முடிவு செய்தது, அதன் பிறகு அவர் ஐபிஎல் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்து தலைமைப் பொறுப்பையும் பெற்றார். அவரும் கோப்பையையே வென்றார். மும்பை இந்தியன்ஸில் பட்டைத்தீட்டப்பட்ட ஹர்திக் கடைசியில் குஜராத்துக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

இது தொடர்பாக கிரண் மோர் கூறும்போது, “ஐபிஎல் 15ல் எனக்கு சிறந்த தருணம் குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் ஆடிய விதம். அது சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஹர்திக் கேப்டனாகி கோப்பையை கைப்பற்றியதன் மூலம், அவரது தனிப்பட்ட ஆட்டமும் சிறப்பாக இருந்தது. மும்பை இந்தியன்ஸிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று புதிய அணியை வழிநடத்தி நேரடியாக சாம்பியன்ஷிப்பை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல.

என்னைப் பொறுத்தவரை, ஹர்திக் ஒரு இளம் வீரர், அவர் எல்லா நேரத்திலும் சிறப்பாக ஆட விரும்பினார். அவர் இப்போது ஒரு நான்கு பரிமாண வீரர் என்று நான் நம்புகிறேன். முன்னதாக, அவர் ஒரு முப்பரிமாண வீரராக இருந்தார், ஏனெனில் அவர் ஒரு பந்துவீச்சாளர், பேட்டிங் மற்றும் பீல்டர், ஆனால் இப்போது அவர் கேப்டனாகவும் இருக்கிறார். எனவே, தேசியத் தரப்பில் திறமையான கிரிக்கெட் வீரர் ஒருவர் இருப்பதைப் பற்றி நமக்குப் பெருமைதானே!” என்றார் கிரண் மோர்.

இப்படித்தான் 2019 உலகக்கோப்பையின் போது அம்பதி ராயுடுவைத் தேர்வு செய்யாமல் விஜய் சங்கரை அதிமதிப்பீடு செய்து 3டி பிளேயர் என்றார் அப்போதைய செலக்டர். அது பலத்த கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. இப்போது ஐபிஎல் வெற்றியை முன் வைத்து ஹர்திக் பாண்டியாவை தோனிக்கு ஒரு மாற்று என்பது போல் ஐபிஎல் ஹீரோவாக கட்டமைக்க முயற்சிகள் நடைபெறுகிறது, இதுவரை இது சரி என்றாலும் சர்வதேச கிரிக்கெட் அளவில் ஹர்திக் பாண்டியா எந்த அளவுக்கு இனி தேறுவார் என்பதே இந்திய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, Hardik Pandya, IPL 2022

அடுத்த செய்தி