தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று: ராஞ்சி மருத்துவமனையில் அனுமதி

மகேந்திர சிங் தோனி

இந்திய முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியான நிலையில் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    இந்திய முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியான நிலையில் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தோனியின் தந்தை பான் சிங் தோனி, தாயார் தேவகி தேவி இருவரும் கொரோனா பாசிட்டிவ் என்பதால் ராஞ்சியின் பரியாது சாலையில் உள்ள பிளஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இருவரும் சாதாரணமாக இருக்கிறார்கள் என்றும், ஆக்சிஜன் அளவு நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரது நுரையீரலும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

    தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் அணியுடன் இருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தோனியும் ரெய்னாவும் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர்.

    அதன் பிறகு தன் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார் தோனி.

    இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,023 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,95,041 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 1,56,16,130 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக கரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    நாடு முழுவதும் இதுநாள்வரை மொத்தமாக 1,32,76,039 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 2,023 பேர் உயிரிழந்தனர். இது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் என்பது அதிர்ச்சித் தகவல்.
    இதனால் மொத்த உயிரிழப்பு 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.

    இன்றைய நிலவரப்படி நாட்டில் 21,57,538 பேர் கரோனாவுக்காக சிகிச்சையில் உள்ளனர்.

    கரோனாவால் பாதிக்கப்படுவதில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று மாநிலத்தில் புதிதாக 62,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இதுவரை 39.6 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 519 பேர் பலியாகினர். இந்நிலையில் மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அமைச்சர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

    மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.
    Published by:Muthukumar
    First published: