ஐபிஎல் போட்டிகளில் தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை!

ஐபிஎல் போட்டிகளில் தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை!

தோனி

ஐபிஎல் போட்டியில் இன்று களமிறங்கும் தோனி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாரும் படைத்திராத ஒரு அரிய சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

  • Share this:
14வது ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.

ஒவ்வொரு சீசனிலும் முதல் 4 இடங்களுக்குள் முன்னேறும் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த சீசனில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மட்டுமல்ல தோனிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட 39 வயதான தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார், கிட்டத்தட்ட இந்த சீசன் அவருக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடைசியாக கடந்த நவம்பர் 1ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடியிருந்தார். அதன் பின்னர் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு தோனி இன்று மீண்டும் கிரிக்கெட் களத்தில் அடியெடுத்து வைப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிறந்த கேம் ஃபினிஷரான தோனியின் பேட்டிங் திறன்கள் அனைவராலும் வியந்து பார்க்கப்படும் அதே நேரத்தில் அவருடைய கீப்பிங் ஸ்டைலும் தனித்துவமானது. பேட்டிங் போன்றே விக்கெட் கீப்பிங்கிலும் என்னற்ற சாதனைகளை தோனி செய்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் ஐபிஎல் போட்டிகளில் முக்கியமான சாதனை ஒன்றை படைக்க தோனிக்கு சரியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டில் ஐபிஎல் முதல் சீசனில் தொட்ங்கி இதுவரை விக்கெட் கீப்பராக 148 விக்கெட் இழப்பிற்கு காரணமாக இருந்துள்ள தோனி, இன்றைய போட்டியில் மேலும் 2 விக்கெட் இழப்பிற்கு காரணமாக இருக்கும்பட்சத்தில் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்களை சாய்த்த விக்கெட் கீப்பர் என்ற அரிய சாதனை படைப்பார்.

தோனி இதுவரை சாய்த்துள்ள 148 விக்கெட்களில் 109 விக்கெட்களை கேட்ச்சாகவும், 39 விக்கெட்களை ஸ்டம்பிங் முறையிலும் அவுட் ஆக்கியுள்ளார். கடந்த சீசனில் தோனி 16 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

தோனியின் சிறந்த சீசன் என்றால் அது 2013ம் ஆண்டாக தான் இருக்கும். அந்த சீசனில் 18 போட்டிகளில் 17 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தோனி (148) முதல் இடத்திலும், 140 விக்கெட்களுடன் தினேஷ் கார்த்திக் 2ம் இடத்திலும், 90 விக்கெட்களுடன் ராபின் உத்தப்பா 3ம் இடத்திலும், 81 விக்கெட்களுடன் பார்த்திவ் பட்டேல் 4ம் இடத்திலும், 76 விக்கெட்களுடன் விருத்திமன் சாஹா 5வது இடத்திலும் உள்ளனர்.
Published by:Arun
First published: