• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி- ஐ.பி.எல்லின் ரியல் சூப்பர் கிங்ஸ் என நிரூபித்த சென்னை அணி

டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி- ஐ.பி.எல்லின் ரியல் சூப்பர் கிங்ஸ் என நிரூபித்த சென்னை அணி

தோனி

தோனி

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி அணி, சென்னை அணி குவாலியர் சுற்றில் இன்று மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். ப்ரித்வி ஷா, அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில் ஷிகர் தவன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஷ் ஐய்யரும் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஹஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் மறுபுறம் ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடிவந்தார். ஸ்ரேயாஷ் ஐய்யர் விக்கெட்டைத் தொடர்ந்து அக்ஷர் பட்டேல் களமிறங்கினார். அவர், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பன்ட் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹெட்மயர் அதிரடியாக ஆடி 37 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

    ஆட்டநேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 172 ரன்களைக் குவித்தது. அதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பஃப் டூப்ளிஸிஸ், ரூத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். டூப்ளிஸிஸ் 1 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பா களமிறங்கினார். உத்தப்பா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ரூத்ராஜ், உத்தப்பா இணை டெல்லி அணியின் பந்துவீச்சுகளைச் சிதறடித்தனர்.

    ரூத்ராஜ் நிதானமாக ஆட உத்தப்பா அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய உத்தப்பா 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தநிலையில் டாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷ்ரதல் தாகுர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய 1 ரன் எடுத்திருந்த நிலையில் அம்பத்தி ராயுடு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி சிறுது நேரம் நீடித்து விளையாடினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ரூத்ராஜ் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, கேப்டன் தோனி களமிறங்கினார்.

    இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இறுதி ஓவரின் முதல் பந்திலேயே மொயின் அலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நான் ஸ்டிரைக்கில் இறங்கினார். தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசி ஓவரில் இரண்டாவது பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார் தோனி.

    அடுத்த பந்தை டாம் கரன் வைட் பந்தாக வீசினார். நான்கு பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் தோனி. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. டெல்லி அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடம் மோதவுள்ளது. இந்த வெற்றியும் மூலம் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது சென்னை அணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: