#CSKvRR | ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டரை காலி செய்த ஜடேஜா, மொயீன் அலி - சென்னை அணி 2வது வெற்றி!

#CSKvRR | ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டரை காலி செய்த ஜடேஜா, மொயீன் அலி - சென்னை அணி 2வது வெற்றி!

ஜடேஜா

சென்னை அணி முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது ,

  • Share this:
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸை டுபிளிசிஸ் - ருத்துராஜ் கெயிக்வாட் தொடங்கினர். இளம் வீரரான ருத்துராஜ் கெயிக்வாட் 10 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து மொயீன் அலி களமிறங்கினார். டுபிளிசிஸ் அதிரடியாக ஆடினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டுபிளிசிஸ் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று ரியான் பராக் வசம் டுபிளிசிஸ் சிக்கினார். அவர் 33 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து ரெய்னா களமிறங்கினார். சென்னை அணி பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது. பவர்ப்ளேக்கு பின்னர் மொயின் அலி அதிரடியை தொடங்கினார். சிக்ஸர் பவுண்டரியுமாக அடிக்கத் தொடங்கினார். மொயின் அலி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திவாட்டியா பந்துவீச்சில் ரியான் பராக் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து அம்பத்தி ராயுடு களமிறங்கினார். ரெய்னாவுக்கு ஆரம்பத்தில் இருந்து பந்து பேட்டில் சரியாகப்படவில்லை. கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருந்தார்.

அம்பத்திராயுடு அதிரடியை கையில் எடுத்தார். ரியான் பராக் ஓவரில் முதல் சிக்ஸரை பறக்கவிட்ட அம்பத்திராயுடு, ராகுல் திவாட்டியா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். அம்பத்தி ராயுடு 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சக்காரியா பந்துவீச்சில் ரியான் பராக் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து ஜடேஜா களமிறங்கினார். அம்பத்தி ராயுடு அவுட்டாகும் போது சி.எஸ்.கே 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அதேஓவரின் 5-வது பந்தில் ரெய்னா அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து தோனி களமிறங்கினார். 13-வது ஓவருக்கு பிறகு பவுண்டரிகளே வரவில்லை.

17-வது ஓவரில் தோனி ஒரு பவுண்டரி அடித்தார். 17 ஓவர் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள்தான் எடுத்திருந்தது. 4 ஓவர்களில் அவர்களால் 20 ரன்கள்தான் வந்தது. சக்காரியா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய தோனி அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய சாம் கரண் ஒரு சிக்ஸரை விளாசி இது டி20 போட்டி என்பதை நினைவுப்படுத்தினார். கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் பவுண்டரி விளாசிய ஜடேஜா அடுத்த பந்திலே அவுட்டானார். இதனையடுத்து பிராவோ களமிறங்கினார். பிரவோ பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கை கொடுத்தார். இதற்கிடையில் சாம்கரன் தேவையில்லாத ரன் அவுட்டில் சிக்கினார். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

மொயீன் அலி


ராஜஸ்தான் தரப்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்களும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களும், முஸ்தஃபிசுர் ரகுமான் , ராகுல் திவேதியா ஆகியோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சென்னை அணிக்கு எக்ஸ்டிராஸ் வகையில் 14 ரன்கள் கிடைத்தது.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் மனன் வோரா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்கோர் 30 ரன்களாக உயர்ந்த போது மனன் வோரா சாம் கரணின் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்சாகி வெளியேறினார். இதே போல ஸ்கோர் 45 ரன்களாக உயர்ந்த போது சாம் கரணின் அடுத்த ஓவரில் டுவைன் பிராவோவிடம் கேட்சாகி வெளியேறினார்.

7 ஓவர்கள் வரை மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணி 8வது ஓவரில் அதிரடிக்கு மாறியது. ரவீந்திர ஜடேஜா வீசிய அந்த ஓவரில் ஜோஸ் பட்லர் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் ராஜஸ்தான் அணி 11 ரன்களை திரட்டியது. ஷர்துல் தாக்கூர் வீசிய 9வது ஓவரில் சிவம் துபே இரண்டு பவுண்டரிகளை ஓட விட்டார். ரவீந்திர ஜடேஜா வீசிய 10 வது ஓவரில் 11 ரன்கள் வந்தன. 11 ஒவரில் பிராவோ சற்று திணறித்தான் போனார். ஒரே ஓவரில் அவர் 4 வைடு பால்களை வீசி ராஜஸ்தான் அணிக்கு உதிரியாக 4 ரன்களை தாரை வார்த்தார்.

ரவீந்திர ஜடேஜாவின் இரட்டை செக்:

இதனிடையே இந்த ஆட்டத்தின் 12வது ஓவர் சென்னை அணிக்கு திருப்பு முனையாக இருந்தது. 35 பந்துகளில் அதிரடியாக 49 ரன்கள் குவித்து அரை சதத்திற்காக தயாராக இருந்த ஜோஸ் பட்லரை முதல் பந்திலேயே கிளீன் போல்டாக்கி அசத்தினார். இதன் பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் சிவம் துபேயையும் வெளியேற்றினார். 17 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் சிவம் துபே அவுட் ஆகினார்.

13வது ஓவரை வீசிய மொயீன் அலி 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து டேவிட் மில்லரின் விக்கெட்டை காலி செய்தார். ரவீந்திர ஜடேஜாவின் 14வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

மொயீன் அலியின் இரட்டை செக்:

மொயீன் அலியின் இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரியான் பராக் (2), கிறிஸ் மோரிஸ் (0) ஆகிய இரண்டு விக்கெட்களை அள்ளினார் மொயீன் அலி. ஒரு வழியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்கள் இழந்திருந்த நிலையில் 16வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 105 ரன்களை எடுத்திருந்தது. அப்போது 24 பந்துகளில் 84 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ராகுல் திவாதியாவும், ஜெயதேவ் உனட்கட்டும் களத்தில் நின்றனர்.

இறுதிக் கட்ட ஓவர்களில் ஜெயதேவ் உனட்கட்டும், ராகுல் திவாதியாவும் அதிரடிக்கு மாறினர். சாம் கரணின் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டினார் ஜெயதேவ் உனட்கட், பிராவோ ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை தூக்கி அசத்தினார் ராகுல் திவாதியா. ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் மிட் ஆஃபில் இருந்த கெய்க்வாட்டிடம் கேட்சாகி வெளியேறினார். இதன் பின்னர் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த உனட்கட்டை காலி செய்தார் ஷர்துல் தாக்கூர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தலான வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மும்பை, டெல்லி அணிகளை  பின்னுக்குத்தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, மும்பை மற்றும் டெல்லி என இரு அணிகளுமே தலா இரண்டு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி முந்தியுள்ளது.

சென்னை அணி முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது ,

 
Published by:Arun
First published: