ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த டுவைன் பிராவோ ரசிகர்கள் மனதில் என்றும் விருப்பமானவராக இருந்தார். தொடர்ந்து சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றி தேடி தந்தாலும் அவரின் விக்கெட் கொண்டாடத்தின்போது ஆடும் ஆட்டங்களை பார்த்து ரசிக்காதவர்களே இல்லை. இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு மேல் சென்னை அணியில் விளையாடி வந்த 39 வயதான பிராவோவை இந்தாண்டு சென்னை அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து விடுவித்தது.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் பிராவோவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெறவுள்ளதாக நினைத்த நிலையில் அவர் சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை சூப்பர் சிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அணியில் வீரராக விளையாடி வந்த பிராவோ அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஒ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் லஷ்மிபதி பாலாஜி சொந்த காரணங்களுக்காக இந்தாண்டு சென்னை அணியில் இருந்து விலகியுள்ளதாவும், இருப்பினும் அடுத்தாண்டு சென்னை அணியில் பாலாஜி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் அதிகப்பட்ச அடிப்படை விலையில் ஒரு இந்திய வீரருக்கு கூட இடமில்லை
பிராவோ ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 161 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 183 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஆல்ரவுண்டராகவும் சென்னை அணிக்கு பல்வேறு ஆட்டங்களில் வெற்றி தேடி தந்துள்ள பிராவோ 1560 ரன்களை குவித்துள்ளார்.
சென்னை அணி 2011,2018 மற்றும் 2021 சாம்பியன் பட்டம் வென்றபோது இவரின் பங்கு பெரிதாகும். மேலும் ஐபிஎல் தொடரில் அதிக முறை பர்பல் கேப் வைத்திருந்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்துள்ளார்.
குறிப்பாக சென்னை அணிக்காக பிராவோ 144 ஆட்டங்களில் விளையாடி 168 விக்கெட்டையும் 1556 ரன்களை அடித்துள்ளார். சென்னை ரசிகர்களின் ஆசை நாயகனாக வலம் வந்த பிராவோ இனி ஐபிஎல் ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Super Kings, CSK, Dwayne Bravo, IPL