ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள்: ரூ.5,000 கோடி ஈட்டும் பிசிசிஐ

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான ஏலத்தின் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ.5,000 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. இதோடு ஐபிஎல் 2022-க்கு மிகப்பெரிய வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

 • Share this:
  ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான ஏலத்தின் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ.5,000 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. இதோடு ஐபிஎல் 2022-க்கு மிகப்பெரிய வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

  ஐ.பி.எல் தொடரில் தற்போது சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளோடு 2022ல் நடக்கும் தொடரில் அணிகள் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிக்க, பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. புதிய அணிக்கான அடிப்படை ஏலத் தொகையாக ரூ.2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  விருப்பமுள்ள நிறுவனங்கள் ரூ.10 லட்சம் செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம். அக்.5 வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். ஆண்டுக்கு ரூ. 3000 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். மூன்று நிறுவனங்கள் சேர்ந்து குழுவாகவும் விண்ணப்பிக்கலாம்.

  புதிய அணிகள் ஆமதாபாத், லக்னோ, புனேவை மையமாக கொண்டு இருக்கும். ஆமதாபாத்தில் அதிகப் பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய மைதானம் உள்ளது. லக்னோவில் பிரமாண்ட எகானா மைதானம் இருப்பதால், இவ்விரு நகரங்களுக்கு வாய்ப்பு அதிகம். புதிதாக இடம் பெற உள்ள இரு அணிகளை வாங்க அதானி குழுமம், ஆர்பிஜி சஞ்சீவ் கோயங்கா குழுமம், பிரபல மருந்தக நிறுவனம், வங்கி சேவை நிறுவனர் என பலரும் ஆர்வமாக உள்ளனர்.

  ஒரு அணிக்கான அடிப்படை தொகை ரூ. 2000 கோடி என்பதால், இறுதி ஏலத் தொகை மிக அதிகமாக இருக்கும். இரு அணிகள் மூலம் குறைந்தது ரூ.5,000 கோடி வருமானம் கிடைக்கும் என பி.சி.சி.ஐ., எதிர்பார்க்கிறது.

  முதலில் அடிப்படை ஏலத் தொகையாக ஒரு அணிக்கு ரூ.1,700 கோடி என நிர்ணயிக்க முடிவு செய்தோம். பின் ரூ. 2000 கோடியாக மாற்றினோம். அடுத்த ஐ.பி.எல்., தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக உயரும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. புதிதாக இடம் பெற உள்ள இரு அணிகளை வாங்க பலரும் விருப்பமாக உள்ளனர்.

  விண்ணப்பம் பெற்ற அனைவரும் ஏலத்தில் பங்கேற்க முடியாது. பி.சி.சி.ஐ., நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தகுதியானவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். இரு அணிகளையும் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுப்பர் என நம்புகிறோம். பி.சி.சி.ஐ.,க்கு ரூ.5000 கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும், என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: