கொரோனாவிலிருந்து விரைவில் மீள்வீர்கள்: தமிழக மக்களுக்கு டிவைன் பிராவோ ஆறுதல்

டிவைன் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடும் மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ கொரோனாவில் அல்லல்படும் தமிழக மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    டிவைன் பிராவோவுக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவு உண்டு. கிரிக்கெட்டோடு அல்லாமல் தமிழ் கலாச்சாரத்தை நேசித்து அதனுடன் ஒன்றிணைந்தவர் பிராவோ. இவர் பாடுவதிலும் வல்லவர்.

    தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வரும் சூழ்நிலையில் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், “வணக்கம், நான் டி.ஜே. பிராவோ. சென்னை எனக்கு இரண்டாவது வீடாகும். தமிழகத்தின் தற்போதைய சூழலை கவனித்து வருகிறேன். தங்களைச் சுற்றியுள்ளவர்கள், நண்பர்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளவும்.

    அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் அனைவருமே சாம்பியன்கள். அரசு வகுத்துள்ள கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.

    வாய்ப்பு கிடைக்கும் போது கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள். கொரோனாவிலிருந்து விரைவில் மீள்வீர்கள்” என்று கூறியுள்ளார்.

    சிஎஸ்கே அணிக்காக பிரமாதமாக ஆடி வரும் டிவைன் பிராவோ, பல முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். இந்நிலையில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் எமிரேட்ஸில் நடக்குமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது. 29 போட்டிகள் முடிந்துள்ளன மீதமுள்ள 31 போட்டிகளை நடத்தாவிடில் ரூ.2,500 கோடி வரை பிசிசிஐ-க்கு நஷ்டம் ஏற்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

    செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக இங்கிலாந்து வாரியத்திடம் டெஸ்ட் தொடரை முன் கூட்டியே முடிக்கக் கோரியது இந்திய வாரியம் ஆனால் இசிபி இது சாத்தியமில்லை என்று கைவிரித்து விட்டது.
    Published by:Muthukumar
    First published: