சிக்ஸர் நம்பர் 351... யூனிவர்சல் பாஸ்-ன்னா சும்மாவா - கிறிஸ் கெயில் புதிய மைல்கல்

கிறிஸ் கெயில்

ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையும் கெய்ல் வசம் தான் உள்ளது.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் , கே.எல்.ராகுல் ஓப்பனிங் செய்தனர். மயங்க் அகர்வால் 3-வது ஓவரில் சக்காரியா பந்துவீச்சில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் களமிறங்கினார்.

  கிறிஸ் கெய்ல் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார்.அவரிடம் பெரிதாக ஃபுட் வொர்க் இல்லை. ஆனால் அது எல்லாம் மத்த பேட்ஸ்மேன்களுக்கு தான் நான் யூனிவர்சல் பாஸ் என மிரட்டினார் கெய்ல். வாள் தூக்கி நிற்பதுபோல் பேட்டை தூக்கி நின்ற கெய்ல் சிக்ஸர்களை பறக்கவிட்டார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 8-வது ஓவரில் மிட் விக்கெட் திசைக்கு மேல் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். ஐபிஎல் வரலாற்றில் தனது 350-வது சிக்ஸரை பதிவு செய்தார் கெய்ல். 9வது ஓவரில் கடைசி பந்தில் திவாட்டியா ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். தொடர்ந்து அதிரடியை காட்டிய கெய்ல் , ரியான் பராக் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் வசம் சிக்கினார். கிறிஸ் கெய்ல் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 133 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 351 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டும் 239 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையும் கெய்ல் வசம் தான் உள்ளது. 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 17 சிக்ஸர்களை விளாசியிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக மிஸ்டர் 360டிகிரி என அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் இருக்கிறார். இவர் 169 போட்டிகளில் 235 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவருக்கு அடுத்த படியாக கூல் கேப்டன் தோனி இருக்கிறார். இவர் 204 போட்டிகளில் 216 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: