ஐபிஎல் 2022 ஏலன் 2ம் நாள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அணியின் பர்ஸ் காலியாகி வருகிறது அதே வேளையில் சிறந்த வீரர்களை பிடித்துப் போடும் போட்டாப்போட்டியும் தொடர இன்று
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடது கை பேட்டர் வலது கை மீடியம் வேகப்பந்து வீச்சாளருமான ஷிவம் துபே என்ற ஆல்ரவுண்டரை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் மும்பையைச் சேர்ந்தவர். மும்பை அணிக்காகவே முதல் தர கிரிக்கெட்டில் ஆடியவர். இவருக்கு வயது 29.
ஷிவம் துபே இந்தியாவுக்காக ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும், 13 டி20 போட்டிகளில் ஆடி 105 ரன்களையும் எடுத்தவர். அதிகபட்ச ஸ்கோர் 54. மொத்தமாக 60 டி20 க்களில் ஆடி 1020 ரன்கள் எடுத்துள்ளார், ஓரளவுக்கு நல்ல பினிஷர் இதுவரை இவரது ஸ்ட்ரைக் ரேட் 136 என்று உள்ளது. பவுலிங்கில் 69 டி20களில் 33 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் 8.73 ஆகும் எனவே இவரை தோனி பவுலிங்கில் பயன்படுத்தினால் ஒன்றிரண்டு ஓவர்களை மிடில் ஓவர்களில் கொடுக்கவே வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் இவர் ஒரு அதிரடி பேட்டர்தான். ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 24 போட்டிகளில் ஆடி 399 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 64 நாட் அவுட். 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 230 ரன்களையே எடுத்தாலும் இவர் அதில் 18 பவுண்டரி 10 சிக்சர்கள் என்று அதிரடியாக பாதிக்கும் மேலான ரன்களை பவுண்டரி சிக்சர்களிலேயே அடித்துள்ளார். பவுலிங்கில் சோபிக்கவில்லை, 24 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். அதிகம் ஓவர்களை ஐபிஎல் தொடரில் வீசியதில்லை மொத்தமே 15 ஓவர்கள்தான் வீசியுள்ளார்.
இவர் இதற்கு முன்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடியுள்ளார். இந்தியாவுக்காக சரியாக அவர் சோபிக்காததால் அணியிலிருந்து தூக்கப்பட்டார்.
இன்று சிஎஸ்கே வாங்கிய இன்னொரு வீரர் மகேஷ் தீக்ஷனா - ரூ.70 லட்சத்துக்கு வாங்கியது. இவர் இலங்கை வீரர். வயது 22. வலது கை பேட்டர், வலது கை ஆஃப்பிரேக் பவுலர். இவர் பவுலர்தான்.
சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், தோனி, ஜடேஜா, மொயின் அலி, ராயுடு, உத்தப்பா, மகேஷ் தீக்ஷணா, டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷிவம் துபே, துஷார் தேஷ் பாண்டே, கே.எம்.ஆசிப். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.