டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஐபிஎல் ஆட்டங்கள்!

ரிஷப் பண்ட்

டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் போது தோள்பட்டை எலும்பு விலகி படுகாயமடைந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடப்பாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி துவங்க உள்ளது. தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து வீரர்களும் போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் போது தோள்பட்டை எலும்பு விலகி படுகாயமடைந்தார். எனவே அவரால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அஸ்வின், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சில மூத்த வீரர்கள் யாருக்காவது கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வீரரான ரிஷப் பண்டை கேப்டனாக நியமித்து டெல்லி அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு தலைமையேற்கும் 5-வது இளவயது கேப்டன் எனும் பெருமையை ரிஷப் பண்ட் பெறுகிறார்.

கடந்த வருட ஐபிஎல் சீசனிலும் டெல்லி அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட், 343 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை அவரது ஸ்ட்ரைக் ரேட் 113.95 மட்டுமே. 2016 முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ரிஷப் பண்ட் இருப்பதிலேயே கடந்த வருடம் தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ரிஷப் பண்ட்டின் கீப்பிங் திறன் மற்றும் உடற்திறன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற லிமிடட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆனால் அதன் பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். சிட்னி போட்டியை டிரா செய்ததிலும், பிரிஸ்பேனில் இந்திய அணி வெற்றி பெற்றதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது இந்த ஃபார்மை இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தக்க வைத்த ரிஷப் பண்ட் டி20, டெஸ்ட் மற்றும் ஒன்டே என அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்களில் ஒருவராகி விட்டார். கடந்த வருட ஐபிஎல் சீசனில் மட்டுமே சறுக்கிய ரிஷப் பண்ட், அதற்கு முன் விளையாடிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ளார்.

128 ரன்கள் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2018 )

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஒரே ஒரு முறை சத்தம் அடித்துள்ளார். அதுவும் வலுவான அணியாக திகழும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 2018-ம் ஆண்டில். வெறும் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 128 ரன்களை குவித்தார். இந்த போட்டியை பொறுத்த வரை ரிஷப் பண்ட் தனி ஒரு ஆளாக நின்று, முதல் பேட்டிங் செய்த தனது டெல்லி அணியை 187 ரன்கள் எடுக்க வைத்தார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 56 பந்துகளில் சதம் விளாசினார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது என்றாலும் ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

78 ரன்கள் vs மும்பை இந்தியன்ஸ் (2019)

மும்பையில் நடந்த இந்த போட்டியில் ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். பண்டின் அதிரடியால் முதலில் ஆடிய டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய மும்பை, 176 ரன்களுக்கு சுருண்டது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம்.

97 ரன்கள் vs குஜராத் லயன்ஸ் (2017)

209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த போட்டியில், பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தனர். டெல்லி 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. கடைசி 40 பந்துகளில் டெல்லிக்கு தேவை 42 மட்டுமே என்ற நிலை வந்தது. இறுதியாக டெல்லி அணி 17.3 ஓவர்களில் 214 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் 43 பந்துகளில் 97 ரன்களை குவித்தார் ரிஷப்.

Also read...  கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தார் ஜீப் பரிசு...!

79 ரன்கள் Vs சென்னை சூப்பர் கிங்க்ஸ் (2018)

புனேவில் நடந்த இந்த போட்டியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது சென்னை அணி. இலக்கை துரத்திய டெல்லி 9 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஆனால் பண்ட் மற்றும் விஜய் சங்கர் ஜோடி அணையை சரிவிலிருந்து மீட்டது. இதில் பண்ட் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து 79 ரன்களை குவித்தார். எனினும் டெல்லி அணி தோல்வியடைந்தது.

85 ரன்கள் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2018)

பெங்களூரில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இதில் பண்ட் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். எனினும் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: