ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள்: 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய போட்டிகள்: 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்

ஜின்சன் ஜான்சன்

ஜின்சன் ஜான்சன்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

    ஆசிய விளையாட்டில், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அத்துடன், மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா  முன்னேற்றம் கண்டுள்ளது.

    ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நிலையில், ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன் மற்றும் மன்ஜித் சிங் களம் கண்டனர். போட்டியில் தொடக்கம் முதலே இருவரும் இலக்கை நோக்கி விரைந்தனர். இதில், பந்தய இலக்கை 3 நிமிடம் 44.72 விநாடிகளில் கடந்து, ஜின்சன் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான மன்ஜித் சிங் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். முன்னதாக, ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் தங்கமும், ஜின்சன் வெள்ளியும் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து நடைபெற்ற மகளிருக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் சித்ரா உன்னிகிருஷ்ணன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். இவர், பந்தய இலக்கை, 4 நிமிடம் 12.56 விநாடிகளில் எட்டினார்.

    ரிலே எனப்படும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் ஹீமா தாஸ், பூவம்மா ராஜூ, சரிதாபென் மற்றும் விஸ்மயா ஆகியோர் களமிறங்கினர். இவர்கள், ஒருவர் பின் ஒருவராக இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தனர். இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வேகம் காட்டவே, இந்தியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

    இந்திய வீராங்கனைகள் பந்தய இலக்கை, 3 நிமிடம் 28.72 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தங்களது கழுத்தில் ஏந்தினர். ஆடவருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றது. முகமது குணு, தருண் அய்யாசாமி, முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை கைப்பற்றினர்.

    இதில், தருண், ஆரோக்கியராஜ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா பூனியா, மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். இவர், 62 புள்ளி 26 மீட்டர் தூரம் வட்டு எறிந்து, பதக்கத்தை தனது கழுத்தில் சுமந்தார்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன், பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில், தடகளத்தில் மட்டும், இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலம் என 19 பதக்கங்களை அள்ளியது... அந்த வகையில் நடப்பு ஆசியப் போட்டியில், தடகளத்துக்கான பதக்கப்பட்டியலில் மட்டும், சீனா, பஹ்ரைனுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Asian Games 2018