Home /News /sports /

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதிச் சுற்று போட்டி ஒடிசா மாநிலம் கலிங்கா மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதி போட்டியில் இந்திய ஆடவர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2-வது தகுதி சுற்றுப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியினர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்தனர்.

    இறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இரண்டு தகுதி சுற்று ஆட்டங்களிலும் பெற்ற ஒட்டுமொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில் இந்தியா 11- 3 என முன்னிலை பெற்றது. இதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் அணி தகுதி பெற்றது.

    முன்னதாக மகளிர் ஹாக்கி ஒலிம்பிக் 2-வது தகுதிச் சுற்றில் இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அமெரிக்க வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின. இறுதியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

    இந்திய அணி போராடி தோற்றாலும், முதல் தகுதிப் போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மொத்த கோல்கள் கணக்கின் அடிப்படையில் இந்தியா 6-5 என முன்னிலை வகித்ததால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் ராணி ராம்பால் அடித்த ஒரே கோல், இந்தியா தகுதி பெறுவதற்கு உதவியது.



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Hockey

    அடுத்த செய்தி