மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஜூலை 8 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் அணி முதல் பிரிவில் 2020 ஆம் ஆண்டு தங்கம் வென்ற விதித் குஜராத்தி தொடக்க வீரராக களம் காண்கிறார். விதித் குஜராத்தியை தவிர முதல் பிரிவில் தமிழகத்தின் எல்.எல். நாராயணன், சசிகிரண் மற்றும் ஹரி கிருஷ்ணா, அர்ஜுன், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆடவர் 2ஆம் பிரிவில், நிஹல் சரின், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், அதிபன் பாஸ்கரன், பிரக்ஞானந்தா உள்ளிட்ட மூவர் மற்றும் சத்வனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மகளிர் முதல் பிரிவில், செஸ் போட்டிகளில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற கோனேரு ஹம்பி பங்கேற்கிறார். அவருடன் ஹரிகா, தமிழக வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி, தானியா சத்தேவ், குல்கர்ணி பக்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மகளிர் பிரிவு இரண்டில், வந்திகா அகர்வால், சவுமியா, கோம்ஸ் மேரி ஆன், பத்மினி, திவ்யா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க | பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ‘தவறான’ ஆட்சி ‘ஒரு ஆய்வு கட்டுரை’: ராகுல் காட்டம்
போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா இரண்டு அணிகளை களமிறக்குகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பிரவின் திப்சே அணியை வழிநடத்துவார்.
ஓபன் பிரிவு முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத், இரண்டாவது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் பயிற்சியாளராக இருப்பார்கள். பெண்கள் முதல் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குண்டேவும், இரண்டாவது அணிக்கு கிராண்ட் மாஸ்டர் ஸ்வப்னில் தோபடேவும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2014-ம் ஆண்டு நார்வேயில் நடந்த ட்ரோம்சோ செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. அதன் பின்னர் 2020-ல் இணையம் வழியாக நடந்த ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் ரஷியாவும் இணைந்து தங்கம் வென்றன. 2021-ல் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.