Home » News » Sports » INDIAN ATHLETE HIMA DAS EXPRESSED HAPPINESS OVER HER VICTORY IN LIFE VIN SADA

சாதாரண ஷூவில் அடிடாஸ் என எழுதினேன்... தற்பொழுது என் பெயரில் அடிடாஸ் ஷூ... மகிழ்ச்சியில் ஹிமா தாஸ்!

சச்சினை பார்த்த தருணம் என்னையறியாமல் அழுதேன் என்று தனது நினைவலைகளை பகிரும் திங் எக்ஸ்பிரஸ் ஹிமா தாஸ்.

சாதாரண ஷூவில் அடிடாஸ் என எழுதினேன்... தற்பொழுது என் பெயரில் அடிடாஸ் ஷூ... மகிழ்ச்சியில் ஹிமா தாஸ்!
ஹிமா தாஸ்
  • Share this:
ஆரம்ப கட்டத்தில் அடிடாஸ் ஷூ வாங்குவதற்கு வழியில்லாமல், தந்தை வாங்கி கொடுத்த ஷூ-வில் அடிடாஸ் என எழுதியிருக்கிறேன். ஆனால், இப்போது என் பெயர் பொறித்த, எனக்காக ஸ்பெஷல் அடிடாஸ் ஷூ தயார் செய்கிறார்கள் என இந்திய தடகள வீராங்கனை தனது ஏக்கங்களையும், மகிழ்ச்சியையும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 

ஹிமா தாஸ். இந்திய தடகள அரங்கில் இந்த பெயருக்கு எப்பவுமே தனிச்சிறப்பான வரலாறு உண்டு. காரணம் வறுமை, பசி, ஏக்கம், முறையான பயிற்சிக்கான உபகரணம் என ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான முக்கிய உபகரணங்கள் எதுவும் இல்லாமல் தங்கத்தை அலங்கரித்திருக்கிறார் "திங் எக்ஸ்பிரஸ்".
கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபின்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்தவர் தான் 20 வயதான இளம் மங்கை ஹிமா தாஸ். அந்த தருணம் முதல் ஒலிம்பிக்-ல் தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுக்க வீரமங்கை வந்துவிட்டாள் என இந்தியாவே பெருமிதம் கொண்டது.


கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு உலகம் முடங்கியுள்ள சூழலில் வீரர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே பயிற்சி மேற்கொண்டு வரும் அதே சமயம், ஹிமா தாஸ் பாட்டியாலாவில் உள்ள என்ஐஎஸ் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

வீரர்கள் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் நேரடியாக தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருவது போல், இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உடன் தனது அனுபவங்களை பகிர்ந்தார் ஹிமா தாஸ்.

விளையாட்டு உடைகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான அடிடாஸ், ஹிமா தாசுக்காக அவர் பெயர் பொறிக்கப்பட்ட சிறப்பு காலணிகளைத் தயாரித்திருக்கிறது. ஆம், ஜெர்மனியை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் ஹிமா தாஸை தனது விளம்பர தூதராக அறிவித்திருந்தது.இது குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்த ஹிமா தாஸ், ஆரம்ப காலத்தில் தந்தை வாங்கி கொடுத்த சாதாரண ஷூ-வில் அடிடாஸ் என தான் எழுதிக்கொண்டதாகவும், தற்போது தன்னுடைய பெயரில் சிறப்பு ஷூ தயார் செய்வது நினைத்துக்கூட பார்க்காத ஒன்று எனவும் மிகவும் மகிழ்ச்சியாக கூறினார்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகள் பற்றி பேசிய ஹிமா தாஸ், ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைத்தது ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றும், வீரர்கள் தங்களுடைய ஆட்டத்திறனை அதிகரிக்க இந்த நேரம் மிக பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஊரடங்கை தான் பாசிட்டிவ் ஆக எதிர்கொள்வதாகவும், மைதானத்தில் பயிற்சி எடுக்க முடியாமல் போனாலும், தன்னுடைய அறையிலேயே யோகா, டயட் போன்றவற்றைத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு பேசிய ஹிமா தாஸ், தடகளம் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளதாகவும், ரசிகர்கள் தன் பெயரை சொல்லி ஆர்வமூட்டுவதும் தனக்கு மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது என்றார் இந்த திங் எக்ஸ்பிரஸ்.

தவிர, தன்னுடைய ரோல் மாடல் எப்பொழுதுமே சச்சின் டெண்டுலர் தான் என கூறிய ஹிமா தாஸ், அவரை சந்தித்த தருணம் தான் தனது வாழ்வின் மிக அற்புதமான தருணம் என நினைவலைகளை பகிர்ந்தார். தனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. அவரை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது தான் தன்னை அறியாமல் அழுதுவிட்டதாகவும், அந்த தருணத்தை தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்றும் உணர்வுப்பூர்வமாக கூறினார்.

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ரோல் மாடலை சந்திப்பது என்பது வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்று தெரிவித்த ஹிமா தாஸ், சச்சினை சந்தித்தது தான் தன் வாழ்க்கையின் சிறந்த மொமண்ட் என பெருமிதம் கொண்டார்.


Also see...
First published: April 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading