பாக்சிங் டே டெஸ்ட்: முன்னாள் நட்சத்திர வீரர் அட்வைஸ்.. ஃபாலோ பண்ணுமா இந்திய அணி?

பாக்சிங் டே டெஸ்ட்: முன்னாள் நட்சத்திர வீரர் அட்வைஸ்.. ஃபாலோ பண்ணுமா இந்திய அணி?

முன்னாள் நட்சத்திர வீரர் VVS லக்ஷ்மணன்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் புதிய உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களமிறங்க வேண்டும் என முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மணன் கூறியுள்ளார்.

  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது. அப்போட்டியில் முதல் இன்னிங்சில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 2வது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் வந்த வேகத்தில் திரும்பினர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். புதிய வீரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், விராட் கோலியின் கேப்டன்சி குறித்தும் சரமாரியாக அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், வரும் 26ம் தேதி சனிக்கிழமை மெல்பேர்ன் நகரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களம் காண உள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அடுத்த நாள் ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு அணி, அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இது பாக்சிங்டே போட்டி என அங்கு அழைக்கப்படும். கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் நேரத்தைச் செலவிட கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்பியுள்ளார், காயத்தால் முகமது சமி தொடரில் இருந்து விலகியுள்ளார். இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து குணமடைந்த ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்புகிறார்.

Also read: மணமகளுக்கு கொரோனா... வித்தியாசமாக கரம்பிடித்த மணமகன் - நெட்டிசன்கள் பாராட்டு

அதேபோல், ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரும் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர் பிரித்திவி ஷா தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவர் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜிங்கியா ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதற்கிடையே, பாக்சிங்டே போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மணன் அறிவுரை கூறியுள்ளார்.

அதில், கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி அணி நிர்வாகம் மற்றும் வீரர்களைக் கடுமையாக பாதித்திருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், அதனை மனதில் வைத்து விளையாடாமல், புதிய உத்வேகத்துடன் களம் காண வேண்டும் என லக்ஷ்மணன் வலியுறுத்தியுள்ளார். கோலி, முகமது ஷமி ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு என்றாலும், புதுமுக வீரர்களுக்கு தங்களின் திறமையை நிரூபிக்க கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என அவர் கூறியுள்ளார்.

சரியான சந்தர்ப்பம் அமைந்துள்ளதால், இதனை இளம் வீரர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் லக்ஷ்மணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒரு போட்டியில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை வைத்து வீரர்களின் திறமையின் மீது சந்தேகப்பட முடியாது எனக் கூறியுள்ள அவர், எஞ்சிய போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் வீரர்கள் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: