India Vs England | பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா: ஃபுல் பார்மில் ஜோ ரூட் - இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன?

India Vs England | பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா: ஃபுல் பார்மில் ஜோ ரூட் - இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன?

India vs England

இந்திய அணியை பொருத்தவரை முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.

  • Share this:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. கொரோனோ கால முடக்கத்திற்கு பிறகு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? இரு அணிகளின் பலம் பலவீனம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை களைகட்ட உள்ளது.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் முதல் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதால் இரண்டாவது போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் ரசிகர்களுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித், கில் ஜோடி சிறப்பான தொடக்கம் வழங்க தடுமாறி வருகிறது. நிலைத்து நின்று விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். விராட், ரஹானே, புஜாரா ஆகியோர் மிடில் ஆர்டரில் தொடர்ந்து ரன் சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். ரிஷப் பண்ட் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சை பொறுத்தவரை அக்‌ஷர் படேல் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். நதீமிற்கு பதில் இரண்டாவது டெஸ்டில் அக்‌ஷர் படேல் களமிறங்குகிறார். பும்ரா, இஷாந்த், அஸ்வின், வாஷிங்டன், அக்‌ஷர் படேல் கூட்டணி பந்துவீச்சில் கலக்க காத்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி நடைபெறுவது கூடுதல் பலத்தையும் வெற்றிக்கான நம்பிக்கையையும் அதிகரித்திருப்பதாக துணைக்கேப்டன் ரஹானே உற்சாகமடைந்துள்ளார்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அசுர பலத்தில் உள்ளனர். கேப்டன் ஜோ ரூட் தொடர்ந்து மூன்று சதம், இரண்டு அரைசதம், மூன்று ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருது என சிறப்பான ஃபார்மில் உள்ளார். கேப்டன்ஷிப்பிலும் ஹாட்ரிக் வெற்றியை ருசித்து அசுர பலத்துடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்கிறார். இவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி இந்த போட்டிக்கு 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இதில் ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தால் அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்பட்டுள்ளார். ஆண்டர்சனுக்கு பதில் கிறிஸ் வோக்ஸ் அணியில், இணைந்துள்ளார். சுழற்பந்துவீச்சில் மொயின் அலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மைதானத்தை பொறுத்தவரை முதல் போட்டி முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. இதற்கு முற்றிலும் மாறாக இந்த போட்டி சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக மாறியுள்ளதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஹானே தெரிவித்துள்ளார். எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: