இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் குப்தில், நிக்கோல்ஸ் களமிறங்கினார்கள். குப்தில் 1 ரன்னில் பும்ரா பந்தில் சிக்கி வெளியேற அடுத்தவந்த கேப்டன் வில்லியம்சன் எந்தவித பதற்றமின்றி பொறுமையுடன் விளையாடினார்.
மற்றொரு தொடக்க வீரரான நிக்கோல்ஸ் 28 ரன்களில் ஜடேஜா சுழலில் வெளியேறினார். 4-வது வீரராக களமிறங்கிய ரோஸ் டெய்லர், கேப்டன் வில்லியம்சன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். வில்லியம்சன், ரோஸ் டெய்லர் அரைசதம் கடந்து இந்திய அணிக்கு கணிசமான இலக்கை நிர்ணயக்க முடிவெடுத்தனர்.
போட்டியின் 46.1 ஓவரில் மழைகுறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. மழை விடாமல் பெய்ததால் போட்டி ஆட்டம் எங்கு நிறுத்தப்பட்டதோ அங்கிருந்து இன்று தொடங்கப்பட்டது.
டெய்லர், லேதம் ஆட்டத்தை தொடர்ந்தனர். கடைசி 4 ஓவர்களை இந்திய அணி சிறப்பாக பந்து வீசியதால் அதிரடி காட்ட முடியாமல் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் 74 ரன்கள் எடுத்தார்.
மான்செஸ்டர் மைதானத்தில் நடப்பு உலகக் கோப்பையில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தியாவின் வழக்கமான தொடக்கத்திற்கு நேர்மாறாக இன்றைய போட்டி இருந்தது. ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல் முதல் 3 வீரர்களும் தலா 1 ரன் எடுத்திருந்தபோது அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த தினேஷ் கார்த்தி 6 ரன்னில் வெளியேறினார். ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டயா இருவரும் 32 ரன்களில் அவுட்டாக இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இந்திய அணியின் தடுமாற்றத்தை தோனி, ஜடேஜா ஜோடி தடுத்து நிறுத்தினர். நியூசிலாந்து பந்துவீச்சை தோனி நிதானமாக எதிர்கொள்ள ஜடேஜா அதிரடியாக ஆடினார். தோனி இருக்கும் நம்பிக்கையில் ஜடேஜா நியூசிலாந்து பந்துவீச்சை சிதறவிட்டு அரைசதம் அடித்தார்.
இந்திய அணி வெற்றி பெற 4 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற இலக்கை இருவரும் இணைந்து கொண்டு வந்தனர். 48-வது ஓவரை போல்ட் வீசிய பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்று அவுட்டானார். ஆட்டம் முழுவதுமாக தோனி கைக்கு சென்றது. 49-வது ஒவரின் முதல் பந்தை தோனி சிக்ஸருக்கு விளாச ஆட்டம் பரபரப்பின் உச்சக்கட்டத்திற்கே சென்றது.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக தோனி அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற போது ரன்அவுட்டாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். தோனியின் விக்கெட் வீழ்ந்ததும் நியூசிலாந்து அணியின் வெற்றியும் உறுதியானது.
இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் மோசமான தொடக்கமே போட்டியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
நியூசிலாந்து அணி தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் நியூசிலாந்து வரும் 14-ம் தேதி இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.