உலகின் மிகப் பெரிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை நான்கே மாதங்களில் சிறப்பாக தமிழக அரசு செய்திருப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
உலகின் மிகப் பெரிய செஸ் போட்டியான ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்துவதற்கான முடிவை அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்தபோது, போட்டிகளை நடத்தும் மாநிலங்களில் பட்டியலில் முக்கிய இடத்தில் தமிழ்நாடு இருந்துள்ளது.
போட்டியைத் தமிழக அரசால் நடத்தித் தருவதற்கு அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பரத் சிங் சவுஹான் தமிழக அரசை அணுகிய சிறிது நேரத்திலேயே அவரை அன்று மாலையே தமிழகத்துக்கு நேரடியாக வரச்சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வந்து சேர்ந்த அவரிடம் உடனடியாக போட்டி நடத்துவதற்கான இடத்திற்கு மாமல்லபுரம் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாளே தன் அலுவல்களை ஒதுக்கி வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் சவுஹானை சந்தித்துள்ளார். அன்று மாலை 4 மணிக்கே போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள சவுஹான் “தமிழக அரசின் முடிவெடுக்கும் வேகம் மிக விரைவாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தைப் பார்வையிட வந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்கும் ரிசார்ட்டுகளும், போட்டி நடத்துவதற்கு விஸ்தாரமான இடங்களையும்
கொண்ட கடலோர சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தைப் பிடித்துப்போகவே மார்ச் மாதம் இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்பு செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதற்கு வெறும் 4 மாதங்கள் மட்டுமே தமிழக அரசுக்கு இருந்துள்ளது.
உடனடியாக ₹92 கோடிகளை ஒதுக்கிய தமிழக அரசு, 37 ஐஏஎஸ் அதிகாரிகளை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க நியமித்தது. செஸ் ஒலிம்பியாட் சின்னமான ‘தம்பி’ அறிமுகப்படுத்தப்பட்டு தம்பியை இந்தியாவெங்கும் கொண்டு சேர்ப்பதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டன.
செஸ் ஒலிம்பியாட் பாடலை இசையமைக்க ஏ ஆர் ரஹ்மான் அழைக்கப்பட்டார். அதை இயக்க விக்னேஷ் சிவன் பணியமர்த்தப்பட்டார். 38 மாவட்டங்களிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் வெற்றியாளர்கள் நேரடியாக செஸ் ஒலிம்பியாட்டை பார்ப்பதற்கு அழைத்து வரப்பட இருக்கின்றனர்.
“தமிழகம் செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவது மிகச் சிறப்பான ஒரு விஷயம்.” என அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை28-ம் தேதி தொடங்கும் செஸ் ஒலிம்பியாட்டுக்காக 187 நாடுகளைச் சேர்ந்த 1,400 வீரர்கள் மாமல்லபுரத்தை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். அவர்கள் மாமல்லபுரத்தில் போட்டி நடக்கும் இடத்தைச் சுற்றியுள்ள 30க்கும் அதிகமான ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.