உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில், சீனாவை வெளியேற்றி, பிரான்ஸ் காலிறுதிக்குள் தடம் பதித்தது.
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நாக்-அவுட் சுற்றை எட்டியுள்ளது. இதில், மொத்தம் 16 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா 4 அணிகள் வீதம் விளையாடின.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து, 2 மற்றும் 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் விதமாக கிராஸ் ஓவர் (CROSS OVER) என்ற நாக்-அவுட் சுற்று நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெறும் அணி காலிறுதிக்குள் நுழையும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கிராஸ் ஓவர் சுற்றில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. தொடக்கத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் விறுவிறுப்பு கூடியது.
இருந்தபோதும், தற்காப்பு ஆட்டத்தில் மிகுந்த கவனத்துடன் ஆடிய இங்கிலாந்து, 2-வது கால் பகுதியில் இருந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் 25 மற்றும் 44-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து மிரட்டியது.
ஆனால், கடைசிவரை போராடியும் நியூசிலாந்து அணியால் பதில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், இங்கிலாந்து 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இந்த அணி நாளை நடைபெறும் காலிறுதியில் அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையடுத்து நடைபெற்ற மற்றொரு கிராஸ் ஓவர் போட்டியில் பிரான்ஸ் - சீனா அணிகள் மோதின. இதில், ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 36-வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

பிரான்ஸ் - சீனா அணிகள்
இதையடுத்து, சீன வீரர்கள் கடுமையாக போராடியும் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதன் எதிரொலியாக, 1-0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த அணி, நாளை நடைபெறும் காலிறுதியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்டவுள்ளது.
இதனிடையே இன்று நடைபெறும் நாக்-அவுட் போட்டியில் நெதர்லாந்து - கனடா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் நாளை மறுதினம் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... பாஜகவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை - தமிழிசை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.