• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை- கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை கொண்டாடுவது ஏன்?

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை- கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை கொண்டாடுவது ஏன்?

ஸ்ரீஜேஷ்

ஸ்ரீஜேஷ்

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி கோப்பையை வென்றுள்ள நிலையில் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

 • Share this:
  ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஹாக்கி அணியின் பதக்க கனவு நிறைவேறியுள்ளது. இதில், இந்தியாவுக்காக களத்தில் இறங்கி 11 வீரர்கள் போராடித் தான் வெற்றியை வசப்படுத்தியுள்ளனர். ஆனால், இவர்களில் ஒருவரை மட்டும் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவர் தான் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்.

  கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் கிழக்கம்பலத்தில் (Kizhakkambalam) 1988-ம் ஆண்டு பிறந்தவர் ஸ்ரீஜேஷ். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் ஹாக்கி அறிமுகமாகியுள்ளது. கைப்பந்து, ஓட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தவரை, விளையாட்டு ஆசிரியரே ஹாக்கி கோல்கீப்பராக ஜொலிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். பின்னர், எட்டாவது வகுப்பு படிக்கும்போது முதன் முறையாக ஹாக்கி விளையாட்டில் எதிராளிகளின் கோல் முயற்சிகளை முறியடிக்க தொடங்கினார்.

  அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே ஜூனியர் பிரிவில் இந்திய அணிக்கு தகுதி பெரும் அளவுக்கு தன்னை மெருகேற்றிக் கொண்டார். 2008-ல் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கித் தொடரில் இந்தியா பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன், சிறந்த கோல்கீப்பருக்கான விருதையும் வென்று, தேசிய அணியில் தடம் பதித்துள்ளார்.

  2011 ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இப்போட்டி டிராவில் முடிந்ததால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில், பாகிஸ்தானின் 2 பெனால்டி வாய்ப்புகளை தடுத்து, இந்தியாவின் நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்தினார்.

  இதை தொடர்ந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக உலா வந்த ஸ்ரீஜேஷ் தலைமையில், இந்தியா 2016-ல் சாம்பியன்ஷ் டிராபி தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அத்துடன், இந்தியாவில் நடத்தப்படும் ஹாக்கி லீக் தொடரிலும் பங்கேற்று, தனது அணியின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கினார்.

  இந்நிலையில், இளம் வீரர்களுடன் டோக்யோ ஒலிம்பிக்கில் களம் கண்ட இந்திய அணிக்கு, அரணாகவும், பக்கபலமாகவும் விளங்கினார். லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை, காலிறுதிக்கு முன்னேற வழி வகுத்தார். குறிப்பாக, காலிறுதியில் இங்கிலாந்து அணியின் கோல் முயற்சிகளுக்கு தடை போட்டு, இந்தியா வெற்றிபெற உதவினார்.

  மேலும், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணிக்கு, 13 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. இதில், ஒன்றை மட்டுமே அந்த அணியால் கோலாக மாற்ற முடிந்தது. அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தான் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்.


  கடைசிக் கட்டத்தில் ஜெர்மனியின் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஸ்ரீஜேஷ் தடுத்ததன் மூலம் தான், டோக்யோ ஒலிம்பிக் மைதானத்தில், இந்திய அணி வீரர்கள் தங்களது கழுத்தில் பதக்கத்தை அணிய முடிந்தது. இதற்காகத் தான் தற்போது ஸ்ரீஜேஷ் கொண்டாடப்படுகிறார்.

  இதன் ஒருபகுதியாக அவரின் சொந்த ஊரில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திருவிழாவாக கொண்டாடினர். இந்திய அணிக்காக 230 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார் ஸ்ரீஜேஷ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது 33 வயதாகும் இவருக்கு இதுவே கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம். 15 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணிக்கு அரணாக இருந்தவருக்கு ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம், ஸ்ரீஜேஷுக்கு மகுடமாக அமைந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: