இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரிடம் விலை உயர்ந்த வாட்சுகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பாண்ட்யா தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாண்ட்யாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 வாட்சுகளின் விலை ரூ. 5 கோடி என்று சமூக வலைதளங்களில் தகவலும், மீம்ஸ்களும் பரவியுள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா நேற்று காலை துபாயில் இருந்து மும்பை திரும்பினார். அப்போது, அவர் வைத்திருந்த பொருட்களை மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஹர்திக் பாண்ட்யா வைத்திருந்த வாட்சுகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று சமூக வலைதளங்களில் உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவின.
இதுதொடர்பாக ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம்தேதி காலை துபாயில் இருந்து மும்பை திரும்பினேன். பின்னர் நானே விரும்பிச் சென்று எனது பொருட்களை சோதனையிட்டு தருமாறு சுங்கத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். துபாயில் சட்டப்பூர்வமாக நான் வாங்கிய பொருட்களின் விபரங்களை தெரிவித்தேன். அவற்றுக்கு செலுத்த வேண்டிய வரியை தருவதாக கூறினேன்.
என்னுடைய வாட்ச்சின் விலை சுமார் ரூ. 1.50 கோடி இருக்கும். ஆனால் சமூக வலைதளங்களில் ரூ. 5 கோடி என்று வதந்திகள் பரவியுள்ளன. சட்டப்படி நடக்கும் இந்தியக் குடிமகனான நான், அரசின் அனைத்து நிறுவனங்களையும் மதிக்கிறேன். சுங்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். என்று கூறியுள்ளார்.
டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ம்தேதி தொடங்கி இம்மாதம் 14-ம்தேதி வரை நடந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்த பாண்ட்யா அடுத்தடுத்த மேட்ச்சுகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்பாது அவர் ஆடம்பர வாட்ச் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Published by:Abdul Musthak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.