செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் இருந்து 188 நாடுகள் பங்குபெறும் இப்போட்டி கோலகலமாகத் தொடங்கியுள்ளது. உலக அளவில் தொடர்ந்து செஸ் சாம்பியன்ஷிப்களில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் மேக்னஸ் கார்ல்சன். யார் இவர்?
1990 நார்வேவில் பிறந்த மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டங்களுக்கு சொந்தமானவர். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பட்டியலில், கடந்த 11ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளார். அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர்களின் பட்டியலில் மேக்னஸ் கார்ல்சன், கேரி காஸ்பரோவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், 2882 புள்ளிகள் பெற்று அதிக புள்ளிகளை பெற்ற கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் முதலிடத்திலுள்ளார்.
கார்ல்சனுக்கு ஐந்து வயது இருக்கும்போது அவரின் தந்தை செஸ் விளையாட கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் செஸ் போட்டியில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், இவரின் மூத்த சகோதரியை போட்டியில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இவர் செஸ் போட்டியை தீவிரமாக அணுகதொடங்கினார்.
13 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற மேக்னஸ் கார்ல்சன், 15 வயதில் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தையும், 17 வயதில் நெதர்லாந்தில் கோரஸ் செஸ் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். 18 வயதில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பட்டியலில் 2800 புள்ளிகளை கடந்த இவர், சிறிய வயதில் 2800 புள்ளிகளை கடந்த கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். 19 வயதில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் மேக்னஸ் கார்ல்சன்.
2009 மற்றும் 2010ல் இவருக்கு பயிற்சியளித்த கேரி காஸ்பரோவ், “இவர், அனடோலி கார்போவ், ஜோஸ் ரவுல் கபாப்லாங்காவை போல விளையாடும் பாணியை கொண்டவர்” என கூறினார். மேலும் இவரை பற்றி பேசிய விஷ்வநாதன் ஆனந்த், “மேக்னஸ் கார்ல்சன் இயற்கையான திறமைகளை கொண்டவர். எந்த இடத்திலும் அவரின் ஆட்டத்தை மாற்றக்கூடியவர்” என பேட்டியளித்தார்.
2013ல் விஷ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், 2014ல் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் என தொடர்ந்து வென்ற இவர், ஒரே நேரத்தில் அனைத்து பட்டங்களும் வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இந்த ஆண்டு பிரக்யானந்தா இவரை இரண்டு முறை வீழ்த்தி, மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனவும், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளைய வீரர் என்ற பட்டமும் பெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.