ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த ரஃபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த ரஃபேல் நடால்

ரஃபேல் நடால்

ரஃபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சாம்பியனான ஜோகோவிச்சை வெளியேற்றி, ரஃபேல் நடால் அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் களிமண் தரையில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 5-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால் உடன் மோதினார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

முதல் செட்டை நடால் எளிதாக கைப்பற்றிய போதும், இரண்டாவது செட்டை ஜோகோவிச் தனதாக்கி பதிலடி கொடுத்தார். இதையடுத்து, நடாலின் கையே ஓங்கியதால், ஜோகோவிச் தனது இயலாமையை மைதானத்திலேயே வெளிப்படுத்தினார்.

4 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-2, 4-6, 6-2, 7-6 என்ற செட்களில் நடால் போராடி வெற்றி பெற்றார். இதன் மூலம், களிமண் தரையில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் தானே ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார் நடால்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் தர நிலையில் 3-ம் இடம் வகிக்கும் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயின் இளம் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ்-ஐ எதிர்கொண்டார். 3 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்தப் போட்டியில் 6-4, 6-4, 4-6, 7-6 என்ற செட்கணக்கில் ஸ்வெரேவ் போராடி வெற்றி பெற்றார்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் நடால் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். பிரெஞ்சு ஓபனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நடால், இறுதி வரை முன்னேறி 14-வது முறையாக மகுடம் சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

First published:

Tags: Rafael Nadal