உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்பிய பிரான்ஸ் அணி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்பிய பிரான்ஸ் அணி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
வீரர்களை வரவேற்கும் ரசிகர்கள்
  • News18
  • Last Updated: July 17, 2018, 7:29 AM IST
  • Share this:
உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய பிரான்ஸ் கால்பந்து அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல, 2-வது இடம் பிடித்த குரோஷிய அணி வீரர்களுக்கும், குரோஷிய நாட்டு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில், குரோஷியாவை 4- 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, உலகக் கோப்பையுடன் பிரான்ஸ் அணி, நேற்று தாயகம் திரும்பியது. பாரீஸ் விமான நிலையத்தில் வீரர்களுடன் வந்த விமானத்துக்கு தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்துக்கு வெளியே வந்த வீரர்கள், திறந்தவெளி இரட்டை அடுக்கு பேருந்தில் அதிபர் மாளிகைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, சாலையின் இருபுறமும் நின்றிருந்த ரசிகர்கள், வர்ணப் பொடிகளைத் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


மேலும், விமானங்கள் மூலம் வானிலும் தேசியக் கொடியின் நிறத்துக்கு ஏற்ப வண்ணப்பொடிகள் தூவப்பட்டன. அதிபர் மாளிகைக்கு சென்றடைந்த வீரர்களை அதிபர் இமானுவேல் மேக்ரோன் கட்டித்தழுவி வரவேற்றார். இதையடுத்து வீரர்களுடன் இணைந்து அதிபரும் தேசியக் கீதத்தை பாடி மகிழ்ந்தார்.

 இதேபோன்று குரோஷியா சென்றடைந்த கால்பந்து வீரர்களுக்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். சிறிய நாடாக இருந்து உலக கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்று தற்போது குரோஷியா என்ற நாட்டை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி விட்டதாக வீரர்களுக்கு ரகிகர்கள் நன்றி தெரிவித்தனர்.
First published: July 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்