சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்புமிக்க முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்திராகாந்தி மைதானத்தில் மாலை 5 மணியளவில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம், பிரதமர் மோடி ஜோதியை ஒப்படைப்பார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27-ந் தேதி போட்டி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.