உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி இன்று களைகட்டவுள்ளது.
கத்தாரில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 32 அணிகளிலிருந்து அர்ஜெண்டினா, குரோஷியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாய்ல் மைதானத்தில் களைகட்டவுள்ளது. இதில் முன்னாள் சாம்பியனான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி - கடந்த உலகக் கோப்பையில் இறுதி வரை முன்னேறிய லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷிய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் அதிகம் இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தலைசிறந்த கோல் கீப்பர்களான அர்ஜெண்டினாவின் மார்டினஷ், குரோஷியாவின் லிவாகோவிச் இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இவர்களை மீறி முன்கள ஆட்டக்காரர்கள் கோல் அடிப்பது சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர வீரர் மெஸ்ஸி நடப்பு உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்து கோல்டன் பூட் ரேசில் 2வது இடத்தில் உள்ளார். அத்துடன் டி மரியா, அல்வரஷ், பெர்னாண்டஸ் உள்ளிட்ட கோல் நட்சத்திரங்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் கோல் மழையை எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை 5 முறை அரையிறுதியில் விளையாடியுள்ள அர்ஜெண்டினா ஐந்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே 6வது முறையாக இறுதிக்குள் நுழைய அர்ஜெண்டினா தீவிரமாக போராடவுள்ளது.
ஆரம்பத்தில் நிதானமாகவும், கூடுதல் நேரத்தில் நிதானத்துடன் கூடிய அதிரடிக்கும் கைதேர்ந்த குரோஷிய அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய காத்திருக்கிறது.
கூடுதல் நேரத்தில் கோல் அடித்து எதிரணியை ஆட்டம் காணவைக்கும் குரோஷிய அணியின் சாதுர்யம் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் தடுப்பாட்டத்தில் சொதப்பும் குரோஷியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
இரு அணிகளும் உலகக் கோப்பையில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, Croatia football team captain, FIFA World Cup