உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் அணியை வீழ்த்தி, கோஸ்டாரிகா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஜப்பான் vs கோஸ்டாரிகா
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள கோஸ்டாரிகா அணி, தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இரண்டாவது லீக் போட்டியில் ஜப்பான் அணிக்கு எதிராக வாழ்வா சாவா என்ற நிலையில் கோஸ்டாரிகா களம் கண்டது. அல் ரயான் நகரில் உள்ள அகமது பின் அலி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் ஆடியதால் அனல் பறந்தது. இருப்பினும், 81-வது நிமிடத்தில் ஜப்பான் தடுப்பு ஆட்டக்காரர்கள் செய்த சிறு தவறை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோஸ்டாரிகா வீரர் கீஷர் ஃபுல்லர், மிரட்டலான கோல் ஒன்றை அடித்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். கடைசி வரை போராடியும ஜப்பான் அணியால் பதிலடி கொடுக்க முடியாததால், கோஸ்டாரிகா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அத்துடன், முதல் வெற்றியையும் ருசித்து, நாக்-அவுட் வாய்ப்பில் நீடிக்கிறது.
கால்பந்து உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக் ஆட்டம்.. வெற்றிப் பாதைக்கு திரும்பிய அர்ஜென்டினா அணி
பெல்ஜியம் vs மொராக்கோ
இதையடுத்து தோஹா நகரில் உள்ள அல்-துமாமா மைதானத்தில் நடைபெற்ற 'எஃப்' பிரிவு லீக் போட்டியில், பெல்ஜியம் - மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால், முதல் பாதி கோல் ஏதும் இன்றி சமநிலையை எட்டியது. ஆனால், இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி, 73-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தியது. அத்துடன், கடைசிக் கட்டத்தில் மேலும் ஒரு கோல் அடித்து, பலம் வாய்ந்த பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் 2-0 என்ற கோல்கணக்கில் மொராக்கோ அணி வெற்றிபெற்றது. தலா ஒரு டிரா, ஒரு வெற்றியுடன் நாக்-அவுட் சுற்று வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியது.
குரோஷியா vs கனடா
இந்நிலையில் "எப்" பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா - கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 68வது வினாடியில், கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட குரோஷியா அணி, 4 கோல்களை அடித்து அசத்தியது. இதனால் அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு தோல்விகளை சந்தித்த கனடா, தொடரில் இருந்து வெளியேறியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி
ஸ்பெயின் vs ஜெர்மனி
இதேபோல் "இ" பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின்-ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஸ்பெயின் வீரர் மொராடா கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக ஜெர்மனி வீரர் நிக்லாஸ் கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Canada, FIFA World Cup 2022, Japan