Home /News /sports /

ஹாக்கியில் உலக நாடுகளை அச்சுறுத்திய இந்தியா... 40 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதது ஏன்?

ஹாக்கியில் உலக நாடுகளை அச்சுறுத்திய இந்தியா... 40 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதது ஏன்?

Exclusive | 45 ஆண்டுகளில் தமிழகத்தில் 4 இடங்களில் மட்டுமே செயற்கை புல்தரை மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி அப்போட்டிக்குள் நுழைவதற்கே தடுமாறி தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் வெறும் கையுடன் நாடு திரும்புவது ஏன்?

ஹாக்கி விளையாட்டில் இந்தியாவை பார்த்து பயப்படாத நாடுகளே இல்லை என இருந்தது ஒரு காலம். ஹாக்கி என்பது இந்தியாவின் உயிர்மூச்சாக இருந்தது. ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் தொடரிலேயே தங்கம் வென்றதுடன் இதுவரை 8 தங்கம் உட்பட 11 பதக்கங்களை ஹாக்கியில் வென்றுள்ள இந்தியா, அதிக பதக்கங்களை கைப்பற்றிய நாடுகளின் பட்டியலில் 100 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

எவராலும் வீழ்த்த முடியாத அணியாக விளங்கிய இந்தியா, ஒலிம்பிக்கில் பங்கேற்கவே தகுதிச் சுற்றில் ஆடவேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹாக்கி இந்தியா அமைப்பின் மோசமான செயல்பாடு தான் இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டுகிறார் விளையாட்டுத்துறை மூத்த பத்திரிக்கையாளர் டி.என், ரகு

 

ஆசியப் போட்டிகளில் பதக்கத்தை தவறவிட்டதால் தகுதிச் சுற்றில் விளையாடி ஒலிம்பிக் போட்டிக்குள் தட்டுத்தடுமாறி இந்தியா நுழைந்திருக்கிறது. இளம் வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் மைதானம் அமைத்துக்கொடுக்காதது, மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு பிறகு திறமையான மாற்றுவீரர்களை உருவாக்காதது போன்றவையே இதற்கு காரணம் என்கிறார் சர்வதேச ஹாக்கி போட்டி நடுவர் முனீர்

 

1976ம் ஆண்டு வரை மண் தரையில் ஆடப்பட்டு வந்த சர்வதேச ஹாக்கி போட்டிகள் பின்னர் செயற்கை புல்தரை மைதானத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் 45 ஆண்டுகளில் தமிழகத்தில் 4 இடங்களில் மட்டுமே செயற்கை புல்தரை மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய முழுமைக்குமே இதே நிலைதான் என அங்கலாய்க்கிறார் இந்திய ஹாக்கி வீரர் வாடிப்பட்டி ராஜா.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகளிலும் ஹாக்கி விளையாடிய காலம் மாறி அத்திப்பூத்தது போல் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே தற்போது விளையாடப்பட்டு வருகிறது. பள்ளிகளில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்தரை ஹாக்கி மைதானம் அமைப்பது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்கிறார் ரகு.

 

சர்வதேச செயற்கை புல்தரை மைதானம் என்பது ஹாக்கி விளையாட்டில் காலத்தின் கட்டாயம். இதை பரவலாக சாத்தியப்படுத்தினால் மட்டுமே இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப்பதக்கக் கனவு நிறைவேறும் என்பது நிதர்சனம்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி