ஃபிஃபா 2018: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குரோஷியா

news18
Updated: July 12, 2018, 10:16 AM IST
ஃபிஃபா 2018: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குரோஷியா
உற்சாக வெள்ளத்தில் குரோஷியா வீரர்கள்
news18
Updated: July 12, 2018, 10:16 AM IST
உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குரோஷியா. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் குரோஷிய அணி நுழைந்தது,  அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ரஷ்யாவில் களைகட்டி வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி,  குரோஷிய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இங்கிலாந்தும், முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து வரலாற்றில் இடம்பிடிக்க குரோஷியாவும் மோதிக்கொண்டன. 

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை எதிரணியின் கோல் கீப்பரின் கைக்கு எட்டாத வகையில், துல்லியமாக பந்தை வலைக்குள் தள்ளி அரங்கத்தை அதிர வைத்தார் இங்கிலாந்து தடுப்பாட்டக்காரர் டிரிப்பர். இதனால் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இங்கிலாந்து வீரர்கள் குரோஷியாவின் கோல் முயற்சியை தகர்த்தெறிந்தனர். இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் திருப்பிய குரோஷியா வீரர்கள் பதில் கோல் அடிக்க மைதானத்தில் பம்பரமாக சுழன்றனர். 65 நிமிட போராட்டத்திற்கு பிறகு சக அணி வீரர் தூரத்திலிருந்து கொடுத்த கிராஸ் பந்தை தலையால் முட்டி பதிலடி கொடுத்தார் குரோஷிய வீரர் பெரிசிச்.

ஆட்டத்தின் 77-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிச் அடித்த பந்து, கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதனால் 2-ஆவது கோல் அடிக்கும் வாய்ப்பு நூழிலையில் பறிபோனது. பின்னர் இரண்டு அணி வீரர்களும் வெற்றி கோலை பதிவு செய்ய தீவிரம் காட்டினர். பிரதான நேரம் முடியும்வரை மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1-1 என ஆட்டம் சமநிலையை எட்டியது. பிரான்ஸ் அணியுடன் இறுதியில் மோதப்போவது யார்? என்பதை  தீர்மானிக்க கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 108-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெரிசிச் லாவமாக தலையால் முட்டிக் கொடுந்த பந்தை, நேர்த்தியாக கோல் அடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார் மேன்ட்சுகிச்.

இதனால் 2 -1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்ற குரோஷியா, இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. வருகின்ற 15-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா பலப்பரீட்சை நடத்தவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக குரோஷியா இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளதால், அந்த அணி வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...