ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் கால்பதிக்கும் தோனியின் கிரிக்கெட் அகாடமி!

தோனி

இந்திய அணியின் நட்சத்திர கேப்டன் மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் அகாடமி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன்மூலம் திறமையான வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே அவரது பயிற்சி அகாடமி உள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தோனியின் பயிற்சி அகாடமி தொடங்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஆர்கா ஸ்போர்ட்ஸ் (Aarka sports) நிறுவனத்துடன் இணைந்து அகமதாபாத்தில் மகேந்திர சிங் தோனி பயிற்சி அகாடமியை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்டமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தோனியின் அகாடமியை இந்தியாவில் நிறுவி வரும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம், Brainiacs Bee என்ற நிறுவனத்துடன் இணைந்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் புதிதாக பயிற்சி அகாடமியை அமைக்க உள்ளன. பெங்களூருவை தவிர்த்து மற்ற நகரங்களில் தோனியின் கிரிக்கெட் பயிற்சி அகாடமி அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்கா நிறுவனத்தின் செயல்தலைவர் மிகிர் திவாகர் (Mihir Diwakar), எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமியை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் நிறுவுவதற்கு பிரெய்னிகாஸ் பீ நிறுவனத்துடன், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பூர்வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பதாக கூறினார். இதன்மூலம் இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்தர கிரிக்கெட் பயிற்சியை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமியில் சிறந்த பயிற்சியாளர் உதவியுடன் வழங்கப்படும் உயர்தர பயிற்சியின் மூலம், கிரிக்கெட் போட்டிகளில் மாணவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக நிச்சயம் மாறுவார்கள் என்றும் மிகிர் திவார் நம்பிக்கை தெரிவித்தார். பயிற்சி அகாடமி தொடங்கப்பட்ட 6 ஆண்டுகளில் இந்தியாவில் 50 பயிற்சி அகாடமிகளும், வெளிநாட்டில் 3 அகாடமிகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 500 பயிற்சியார்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்து வருவதாக கூறினார். எம்.எஸ்.தோனி பயிற்சி அகாடமியின் கீழ் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றிருப்பதாக தெரிவித்த அவர், பல்வேறு மாநில அளவிலான அணிகளில் அவர்கள் பங்கேற்று விளையாடி வருவதாகவும் கூறினார்.  

பிரெய்னிகாஸ் பீ நிறுவனத்தின் இயக்குநர் வினோத்குமார் பேசும்போது, ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு உயர்தர கிரிக்கெட் பயிற்சி வழங்குவதற்கு தங்கள் நிறுவனம் ஆவலாக இருப்பதாக கூறினார். இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த தோனியின் மேற்பார்வையின் கீழ் கொடுக்கப்படும் பயிற்சியில், நிச்சயமாக மிகச்சிறந்த திறமையாளகள் உருவாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: