சென்னை வந்த தோனி - `தலை-வா' ட்வீட் போட்டு உற்சாக வரவேற்பளித்த சிஎஸ்கே நிர்வாகம்!

Dhoni

மார்ச் 9-ஆம் தேதி தொடங்க உள்ள சென்னை அணியின் ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ரசிகர்களால் செல்லமாக `தல’ என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்துள்ளார். இதனை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 • Share this:
  கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 14-வது சீசன் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள அணிகள் பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.

  மார்ச் 9-ஆம் தேதி தொடங்க உள்ள சென்னை அணியின் ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ரசிகர்களால் செல்லமாக `தல’ என்றழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்துள்ளார். இதனை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தோனி சென்னை வந்ததையொட்டி அவர் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, Thalai-Vaa! என்று வரவேற்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

  இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விமான நிலையம் வந்த தோனிக்கு, ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே நிர்வாகிகள் என பலரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின் அவரை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றனர். ஹோட்டலுக்கு வந்த தோனியை அங்குள்ள நிர்வாகிகளும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வீடியோவையும் சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  முன்னதாக கடந்தாண்டு சென்னை வந்த தோனி சென்னையிலிருந்து தனது ஓய்வை அறிவித்ததும், தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் தன் ஓய்வை அறிவித்ததும் நினைவிருக்கலாம். நடப்பாண்டு ஐபிஎல் பயிற்சிக்காக தற்போது சென்னை வந்துள்ள தோனியுடன், விரைவில் அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா மற்றும் சில தமிழக வீரர்கள் இணைந்து விரைவில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதும் அமீரக நாட்டில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாம் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. எனினும் அந்நிய மண்ணில் போட்டிகள் நடைபெற்றதால் இந்திய ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நாட்டில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து உள்ளூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  முன்னதாக மும்பை மற்றும் புனேவை லீக் ஆட்டங்களுக்கான இரண்டு இடங்களாகவும், பிளேஆஃப் போட்டிகளுக்கு அகமதாபாத் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களில் மகாராஷ்டிராவில் கோவிட் 19 வழக்குகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.

  இதனிடையே போன சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி, இம்முறை தல தோனி தலைமையில் பழைய கம்பீரத்துடன் ஃபார்முக்கு திரும்பி, 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்பாக உள்ளது.
  Published by:Ram Sankar
  First published: