இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் வம்பிழுத்துள்ளார்.
சமீபத்தில் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் போட்டிருந்த ஒரு புகைப்படத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கிண்டலான கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1996-ல் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அவரது அறிமுக டெஸ்ட்போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில் அதை யுவராஜ் நகைச்சுவையாக கிண்டலடித்துள்ளார்.
காரணம் கங்குலி பதிவிட்டுள்ள புகைப்படத்தில் “கெட்டி இமேஜ்ஸஸ்’ என்ற நிறுவனத்தின் லோகோ உள்ளது. அதைக் சுட்டிக்காட்டி உள்ள யுவராஜ் சிங்,’தாதா நீங்கள் தற்போது பிசிசிஐ-யின் தலைவர். தயவுசெய்து கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்’, என்று கமெண்ட் அடித்து வம்பிழுத்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள சூழலில் இதற்கு கங்குலி இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.
யுவராஜ் சிங் இயல்பிலேயே மிகவும் கலகலப்பானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் 2000-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் முதல்முறையாக இடம்பெற்று பின் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
கங்குலியின் இந்த பதிவிற்கு சச்சினும் கமெண்ட் செய்துள்ளார். அதில்,’இந்த புகைப்படம் முலம் லார்ட்ஸில் நம் தாதா ஆடிய ஆட்டம் தான் என் நினைவிற்கு வருகிறது,’ என பழைய நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.