மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது என யுவராஜ் சிங் ட்விட்டரில் விளாசி உள்ளார்.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய முதல் டி20 போட்டி ஐதராபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 207 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி அபார ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கில் சில தவறுகள் செய்தது. ஷிம்ரான் ஹெட்மியர் 44 ரன்கள் எடுத்திருந்த போது அவரது கேட்சை வாஷிங்டன் சுந்தர் தவறவிடுவார். இதனால் டி20 போட்டியில் முதல் அரைசதத்தை அவர் பதிவு செய்தார். அதேப் போன்று பெல்லார்டு 24 ரன்கள் எடுத்திருந்த போது அவரது கேட்சை ரோஹித் சர்மா கோட்டை விடுவார். இதனால் பெல்லார்டு 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி ஃபீல்டிங் சொதப்பியதை யுவராஜ் சிங் ட்விட்டரில் விளாசி உள்ளார். அவரது பதிவில், “பீல்டிங்கில் இந்திய அணிக்கு மோசமான நாள். இளம் வீரர்கள் பந்தை பிடிப்பதில் கோட்டை விட்டு உள்ளனர். இப்படி இருந்தால் சிறுவர்களிடம் இருந்தும் ரன்களை பெறுவோம்“ என்றுள்ளார்.
இந்தப் போட்டியில் 94 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.