சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சுனில் கவாஸ்கர், சேவாகுடன் ஒப்பிடும் ஒரு வீரர் இனி வருவாரா என்று நாமெல்லாம் எதிர்பார்த்த நிலையில் விராட் கோலி வந்தார் தூக்கிச் சாப்பிட்டார், ஆனால் இப்போது சதங்களின்றி அவர் கிரிக்கெட் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க மனம் வலிக்கிறது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்துள்ள விராட் கோலி, கடைசியாக 2019 நவம்பரில் பங்களாதேஷுக்கு எதிராக சதம் எடுத்தார். அதன்பிறகு, விளையாட்டின் எந்த வடிவத்திலும் சதம் அடிக்க அவர் சிரமப்பட்டார். விராட்டின் 71வது சதத்திற்கான காத்திருப்பு இப்போது 30 மாதங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. மேலும் 33 வயதான விராட்டின் பழைய பார்முக்குத் திரும்பும் திறன் குறித்து ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
நவீன கால ஜாம்பவான் பேட்டராக கருதப்படும் விராட் கொலி இவ்வளவு சொதப்பலாக ஆடிவருவது குறித்து உலகக் கோப்பை வென்ற முன்னால் கேப்டன் கபில் தேவ் கூறும்போது கோலி போன்ற தரமான ஒரு வீரர் சதம் இல்லாமல் இவ்வளவு காலம் சென்றதைக் கண்டு வேதனை அடைகிறேன் என்று கூறியுள்ளார். இது ஒரு பெரிய கவலையாக மாறி வருவதாக கபில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கபில்தேவ் கூறியதாவது:
கோலி போன்ற ஒரு பெரிய வீரர் சதமெடுத்து நீண்ட காலம் ஆகிறது என்பதும் இத்தனை பெரிய இடைவெளியும் என்னை கவலைக் கொள்ளச் செய்கிறது, என் மனம் வலிக்கிறது. நமக்கெல்லாம் அவர் ஹீரோ போன்று. கவாஸ்கர், சச்சின் திராவிட், சேவாக் போன்றோருடன் ஒப்பிடும் வீரர் ஒருவர் வருவார் என்று நாம் எண்ணியதில்லை.
ஆனால் இவர் வந்தார், நாமும் ஒப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்டோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலி பார்மை இழந்திருப்பது என்னை கவலைகொள்ளச் செய்கிறது, நம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
நான் விராட் கோலி விளையாடிய அளவு கிரிக்கெட் ஆடியதில்லை. ஆனால் போதுமான அளவு ஆடாததே நாம் சிலரது கிரிக்கெட்டை அறுதியிடுவதற்குப் போதுமானதாக உள்ளது. நாம் கிரிக்கெட் ஆடியுள்ளோம், ஆட்டத்தின் தன்மையை புரிந்து கொள்கிறோம். அதன் பிறகு அவர்கள் சிந்தனா முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். நம் சிந்தனை முறையை அல்ல.
நாங்கள் தவறாக யோசிக்கிறோம் என்று அவர் நிரூபித்தால் நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ரன்கள் எடுக்கவில்லை எனில் அவரிடம் ஏதோ சீரியசாக தவறிருக்கிறது என்று நாங்கள் நினைப்பதை தடுக்க முடியாது. நாங்கள் கோலியின் ஒன்றைத்தான் பார்க்கிறோம், அவரது செயல் திறன்.
சரியாக ஆடவில்லை என்றால் மற்றவர்கள் வாயை மூடி அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது உங்கள் பேட் மற்றும் ஆட்டத்திறன் தான் பேச வேண்டும் கோலி.
என்றார் கபில் தேவ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Virat Kohli