2018-ம் ஆண்டிலிருந்து 2020 வரை கிரிக்கெட்டை விட்டு சென்று விடலாம் என்று பல்வேறு காரணங்களுக்காக தன் மனதில் தோன்றியது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அஸ்வின் காயங்களினால் பெரிய அளவில் அவதிப்பட்டார், முழங்கால் காயம், தோள்பட்டைக் காயம், இடுப்பில் வலி போன்றவற்றினால் சில தொடர்களில் உட்கார நேரிட்டுள்ளது. அஸ்வின் இந்தியா உற்பத்தி செய்த தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர். அதிக தொடர் நாயகன் விருதுகளை டெஸ்ட் தொடர்களில் பெற்றுள்ள ஒரே ஸ்பின்னர். முழங்கால் மூட்டு தசைநார்களில் சிக்கல் ஏற்பட்டு நடந்தாலே வலிக்கும் patellar tendonitis என்பதால் பாதிக்கப்பட்டார் அஸ்வின்.
இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கிரிக்கெட் மந்த்லிக்கு பேட்டியளித்த அஸ்வின், “2018 முதல் 2020 வரை பல சந்தர்ப்பங்களில் கிரிக்கெட்டை விட்டே ஓய்வு பெற்று விடலாம் என்ற அளவுக்கு மன உளைச்சல் இருந்தது. நிறைய முயற்சிகள் செய்தும் எதுவும் சரிவரவில்லை. நான் எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக உழைக்கிறேனோ அந்த அளவுக்கு மீளுவது தூரம் சென்று கொண்டே இருந்தது. அதாவது காயம் என்றால் சாதாரணமல்ல, 6 பந்து வீசி விட்டு மூச்சுக்காக திணறுவேன்.
வலி எல்லா இடங்களிலும் வலி, எனவே அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். முழங்கால் வலி பின்னி எடுக்கும் போது பந்து வீசும்போது குதிப்பதை குறைப்பேன். அப்படி ஜம்ப்பை குறைத்தால் கையில் தோள் மற்றும் முதுகில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது இடுப்பு மற்றும் இடுப்பும் தொடையும் சேரும் பகுதியில் வலி பின்னி எடுக்கும், அதாவது போதும் பவுலிங் போட்டது போதும் என்ற எண்ணமே இருக்கும்.
நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், பிராண்ட் செய்யுங்கள், அணியை விட்டுத் தூக்குங்கள், ஆனால் என் நோக்கம், என் போராடும் நோக்கம் ஆகியவற்றை சந்தேகித்தால் அது என்னை ஆழமாகக் காயப்படுத்தும். நான் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். என் காயங்கள் குறித்து யாரும் மதிக்கவே இல்லை. காயமடைந்த எத்தனையோ பேரை ஆதரிக்கும் போது என்னை ஏன் அந்தத் தருணத்தில் ஆதரிக்கவில்லை? நான் ஒன்றும் குறைவாக அணிக்காகச் செய்யவில்லை. நிறைய போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறேன்.
Also Read: ஜோக்காகச் சொன்னது விபரீதமானது: சர்ச்சையில் சிக்கிய கங்குலி
ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை என்பது வருத்தமே. நான் பொதுவாக யாருடைய உதவியையும் ஆதரவையும் எதிர்பார்ப்பவனல்ல. கருணையையும் நான் எதிர்பார்ப்பவனல்ல. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவை என்று நினைத்தேன். அதுதான் நடக்கவில்லை. 2018 இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அதே ஆண்டில் பின் பகுதியில் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்ட்டில், சிட்னிக்கு முன்னும் பின்னும் நான் விரக்தி மனநிலையில்தான் இருந்தேன், என் மனைவியிடம் தான் பேசுவேன். ஆனால் என் தந்தை தீவிரமாக இருந்தார், “நான் இறப்பதற்குள் மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு நீ திரும்புவாய்” என்று என் தந்தை திட்டவட்டமாக நம்பினார். அவருக்கு அது மிகவும் பெர்சனலான விஷயமாகி விட்டது” என்றார் அஸ்வின்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.