‘திக்... திக்’ கடைசி ஓவரை வீசும்போது நடராஜனின் நெஞ்சு படபடப்பை கற்பனை கூட செய்ய முடியாது : மைக்கேல் வான் ஆச்சரியம்

நடராஜன்.

சாம் கரனின் பேடுக்கு பந்து சறுக்கிக் கொண்டு வருமாறு, தாழ்வாக வீசினார். இத்தகைய ஓவர்களில் நடராஜனின் இருதயத் துடிப்பு, நெஞ்சுப் படபடப்பை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று புகழ்ந்துள்ளார் மைக்கேல் வான்.

 • Share this:
  இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவையாக இருந்த போது நடராஜனிடம் பந்தைக் கையில் கொடுத்தார் விராட் கோலி.

  வாழ்நாளின் மிகப்பெரிய டெஸ்ட் அது நடராஜனுக்கு. பிரிஸ்பனில் அறிமுக டெஸ்ட்டில் ஆடி வீசியதை விட இது மிகப்பெரிய டெஸ்ட், ஏனெனில் நடராஜன் ஓவரில் தோற்றிருந்தால் அவரை ட்ரோல் செய்ய ஏற்கெனவே ஒரு சிலபேர் தயாராகி விட்டிருந்தனர், இது நடராஜன் ரசிகர்களுக்கும் இருதயத் துடிப்பை அதிகரித்தது.

  அந்த ‘திக்... திக்..’ கடைசி ஓவரை பிரமாதமாக வீசி அக்னிப்பரீட்சையில் அனாயசமாக தேறி விட்டார் நடராஜன், இங்கிலாந்து தொடரை இழக்க இந்திய அணி 2-1 என்று வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்தையும் வென்ற பெரிய தொடராக அமைந்தது.

  இந்நிலையில் அனைவரும் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார் ஆட்டத்தை புகழ்ந்து பேசி வரும் நிலையில் அந்த ஒரு ஓவர் அவர்கள் ஆட்டத்தின் பங்களிப்பையே மாற்றிப்போட்டிருக்கும், ஆனால் அந்த பங்களிப்பை நாம் பேசுவதற்குக் காரணம் நடராஜனின் கடைசி ஓவர்.

  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 10 ஒவர் 73 ரன்கள் என்று அவரது பந்து வீச்சும் அடித்து நொறுக்கப்பட்டதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தன் சமூக ஊடகப் பக்கத்தில் நடராஜனைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

  “யார்க்கர் என்பது ஒரு இறந்துபோய்க்கொண்டிருக்கும் கலை. வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் நாளில் உலகம் முழுதும் டி20 லீகுகள் நடைபெறும் இந்த நாளில் நிறைய பவுலர்கள் யார்க்கர்களை வீசுகின்றனர். அதனால் அது குறித்த ஒரு பரிச்சயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இன்னமும் கூட கடைசியில் எளிதில் அடிக்க முடியாத பந்து யார்க்கராகவே இன்னமும் உள்ளது.

  ஆனால் யார்க்கர் சரியாக விழவில்லை எனில் பந்து நேராக ஸ்டாண்டுக்குத்தான் அடிக்கப்படும். நெருக்கடியில் யார்க்கர் வீச ஒருவிதமான அமைதி மனோநிலை ஏகாந்தம் வேண்டும். லசித் மலிங்கா, பிரெட் லீயை எடுத்துப் பாருங்கள்.

  பந்தைத் தூக்கி அடிக்க கொஞ்சம் பந்துக்கும் தரைக்கும் இடைவெளி தேவை இதைத்தான் சாம் கரன் எதிர்பார்த்தார், ஆனால் நடராஜன் தன் பதற்றத்தை தணித்துக் கொண்டு வீசினார். சாம் கரனின் பேடுக்கு பந்து சறுக்கிக் கொண்டு வருமாறு, தாழ்வாக வீசினார். இத்தகைய ஓவர்களில் நடராஜனின் இருதயத் துடிப்பு, நெஞ்சுப் படபடப்பை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

  யார்க்கரை பிரமாதமாக துல்லியமாக வீசியதற்கு அவருக்கு முழு பாராட்டுக்கள்” என்றார் மைக்கேல் வான்.
  Published by:Muthukumar
  First published: