விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கேப்டன் விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்குக் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே டிராபியை இதுவரை தமிழ்நாடு, கர்நாடக அணிகள் 4 முறை வென்றுள்ளன, மும்பை அணியும் கடந்த முறை வென்று 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் இரண்டிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடவில்லை, சையது முஷ்தாக் அலி தொடரிலும் விளையாடவில்லை.அதேபோல காயத்தால் தினேஷ் கார்த்திக்கும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடவில்லை. இருவரும் காயத்திலிருந்து குணமடைந்ததால், விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்குத் திரும்பியுள்ளனர்.
ஆனால், காயத்தில் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து பிறகு மீண்டும் தமிழக அணியில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யார்க்கர் நடராஜன், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் நடராஜன் சரியாக வீசவில்லை என்ற காரணமா? அல்லது அவர் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையவில்லையா என்பது தெரியவில்லை.
இந்திய அணி வரலாற்றில் ஒரே தொடரில் நெட் பவுலராகச் சென்று மூன்று சர்வதேச வடிவங்களிலும் அறிமுகமாகி, ஆஸ்திரேலியாவில் கலக்கிய நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது நெருக்கடியான தருணமே. அவர் இதிலிருந்து மீண்டு, திரும்பவும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு நாம் பிரார்த்திப்போம்.
தமிழக வீரர் பாபா அபராஜித் தற்போது தென் ஆப்பிரிக்க சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழக அணிக்கு வருகை இன்னும் உறுதியாகவில்லை ஆதலால்,அவரின் சகோதரர் பாபா இந்திரஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பையில் உயர்மட்ட பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணியுடன் மும்பை, புதுச்சேரி, பரோடா, வங்காளம், கர்நாடக அணிகள் இடம் பெற்றுள்ளன.
விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணி விவரம்:
விஜய் சங்கர்(கேப்டன்), என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமதது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricketer natarajan, T natarajan