முகப்பு /செய்தி /விளையாட்டு / Year Ender 2021: கப்பா, லார்ட்ஸ், செஞ்சூரியன் : 2021-ல் இந்திய அணி கொடியேற்றிய கோட்டைகள்!

Year Ender 2021: கப்பா, லார்ட்ஸ், செஞ்சூரியன் : 2021-ல் இந்திய அணி கொடியேற்றிய கோட்டைகள்!

கப்பா, பிரிஸ்பன் முதல் செஞ்சூரியன் வரை இந்திய அணியின் வரலாற்று 2021 வெற்றிகள்

கப்பா, பிரிஸ்பன் முதல் செஞ்சூரியன் வரை இந்திய அணியின் வரலாற்று 2021 வெற்றிகள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

2021-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு, குறிப்பாக டெஸ்ட் அணிக்கு அபாரமான ஆண்டாக அமைந்துள்ளது, நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்றது மட்டும்தான் ஒரே கரும்புள்ளி, மற்றபடி பிரிஸ்பன், லார்ட்ஸ், செஞ்சூரியன் என்று SENA நாட்டுக் கோட்டைகளைக் கைப்பற்றி இந்திய கொடியைப் பறக்க விட்டுள்ளது, கோலி மற்றும் ரகானே படை.

இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறும் 8-வது வெற்றி இதுவாகும். காலண்டர் ஆண்டில் 2-வது அதிகபட்ச வெற்றி யாகும். இதற்குமுன் 2016ல் 9 வெற்றிகளை இந்திய அணி அதிகபட்சமாகப் பெற்றிருந்தது. கடைசியாக 2010ம் ஆண்டில் 8 வெற்றிகளை இந்திய அணி பெற்றது அதன்பின் இந்த ஆண்டுதான் 8 வெற்றிகளைப்பெறுகிறது. இதில் 4 வெற்றிகள் ஆசியாவுக்கு வெளியே கிைடத்த வெற்றியாகும்.

டி20 உலகக்கோப்பையை தோற்றது 2021-ல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றாலும் கிரிக்கெட்டின் உச்சபட்ச வடிவமான, கடும் உழைப்புத் தேவைப்படும் வடிவத்தில் இந்திய அணி நம்பர் 1 ஆகத் திகழ்வது நிச்சயம் பெருமையளிக்கக் கூடியதாகும்.

ரவி சாஸ்திரி, பாரத் அருண் மற்றும் உதவிப்பணியாளர்கள், பயிற்சியாளர்கள், உடல்கூறு நிபுணர்கள், பிட்னெஸ் நிபுணர்கள் என்று அனைவருக்கும் இந்தப் பெருமை சேர்வதோடு வெற்றியைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்ற ஓய்வு ஒழிச்சல் இல்லாத கேப்டன் விராட் கோலி இந்தப்பெருமைக்குரியவராவார், அனைவருக்கும் மேலாக பவுலர்கள், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சிராஜ், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதனால்தான் வெற்றி சாத்தியமாகிறது.

இந்திய பேட்ஸ்மென்கள் சொதப்புகின்றனர், பவுலர்களால்தான் வெற்றியே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் 190 அடித்தால் எதிரணியை 210-க்குள் சுருட்டும் பந்து வீச்சு நம்முடையது, இதுதான் இந்த வெற்றிக்கும் டெஸ்ட் எழுச்சிக்கும் காரணமாகும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க்காவில் ஒரே ஆண்டில் தொடரை வெல்லும் வெற்றிகளைக் குவித்துள்ளது இந்திய அணி குறிப்பாக பிரிஸ்பன் கோட்டையை ரகானே படை தகர்த்தது, அதுவும் புதிய பவுலர்கள் சிராஜ், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தரை வைத்துக் கொண்டு பிரிஸ்பனில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கின் மூலம் இந்திய அணி கோட்டையை தகர்த்தது.

Also Read: Year Ender 2021: 2021-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் அணி - ஆகாஷ் சோப்ரா தேர்வில் கோலி, ஸ்மித் இல்லை

பிறகு இங்கிலாந்தின் லார்ட்ஸ் கோட்டையை தகர்த்தது, அதுவும் 60 ஒவர்களே மீதமிருந்த கடைசி நாளில் 120 ரன்களுக்கு இங்கிலாந்தைச் சுருட்டி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு அவமானகரமான தோல்வியை இந்திய அணி பரிசாக அளித்தது. கிரிக்கெட்டின் மெக்காவில் கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த அணிக்கே இழிவான தோல்வியை பரிசாகக் கொடுத்தது இந்திய அணி.

2021 முடிவில் இப்போது செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவை முறியடித்தது இந்திய அணி. 2022-லும் இந்திய அணி மேன் மேலும் முன்னேற வாழ்த்துவோம்.

First published:

Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, Team India, YearEnder 2021