• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஜேமிசனை ஆடத் தெரியாமல் 71 ரன்களில் 7 விக். பறிகொடுத்த இந்தியா! இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள் திணறல்: நியூசிலாந்து ஆதிக்கம்

ஜேமிசனை ஆடத் தெரியாமல் 71 ரன்களில் 7 விக். பறிகொடுத்த இந்தியா! இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள் திணறல்: நியூசிலாந்து ஆதிக்கம்

ஜேமிசன் பந்தில் எல்.பி. ஆன விராட் கோலி.

ஜேமிசன் பந்தில் எல்.பி. ஆன விராட் கோலி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா தன் முதல் இன்னிங்சில் 146/3 என்ற நிலையிலிருந்து 71 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாபமாக 217 ரன்களுக்குச் சுருண்டது. கைல் ஜேமிசன் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  • Share this:
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது, கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும் ராஸ் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருக்கின்றனர்.

கைல் ஜேமிசன் தன் 8 டெஸ்ட்களில் 5வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெவன் கான்வே பிறகு பேட்டிங்கில் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் அரைசதத்தை எடுத்தார். மழை பெய்தாலும் இன்னும் 294 ஓவர்கள் இந்த டெஸ்ட் போட்டியில் மீதமுள்ளதால் நிச்சயம் வெற்றி தோல்வி முடிவு தெரியவே அதிக வாய்ப்புள்ளது.

ரகானே, கோலி நேற்று காலை தொடங்கும் போது ஏற்கெனவே விராட் கோலியின் பொறுமை உத்தியைப் புகழ்ந்து தள்ளி விட்டனவா ஊடகங்கள், அதனால் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.

ஜேமிசனை ஆட முடியவில்லை, இரு புறமும் ஸ்விங் செய்ய துல்லியத்தின் உச்சத்தில் வீசினார். 44 ரன்களில் இறங்கிய கோலி, அதே ரன்களில் ஜேமிசனின் துல்லிய இன்ஸ்விங்கரை கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஒரே லெந்தில் பந்து உள்ளே வருகிறதா, வெளியே செல்கிறதா என்பதை கோலியால் நிர்ணயம் செய்ய முடியவில்லை.

ஆவலுடன் எதிர்பார்த்த ரிஷப் பந்த் வந்தார். அவர் ஒரு அன் ஆர்த்தடாக்ஸ் பேட்ஸ்மென், ஆனால் இந்த ஸ்விங் கண்டிஷனில் தேவைப்படுவதோ நேர் மட்டையுடனான ஒரு உத்தி. அது ரிஷப் பந்த்துக்கு சரிப்பட்டு வராது, முதல் 14 பந்துகளில் 10-11 பந்துகளை காலில்தான் வாங்கினார். 1 ரன் எடுக்க 20 பந்துகள் எடுத்துக் கொண்டார், சரளமாகவும் ஆடவில்லை. மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்தார், கடைசியில் நிற்பதா அடிப்பதா குழப்பத்தில் வைடாக சென்ற பந்தின் மீது மட்டையை விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார்.

இன்னும் ஒரு ஓவர் புதிய பந்து எடுக்க இருக்கும் வேளையில் ரகானே பொறுமை காத்திருக்கலாம். நீல் வாக்னர் தனது ஷார்ட் பிட்ச் பந்து உத்திக்குச் சென்று அருமையாக களவியூகம் அமைத்தார். டீப் ஸ்கொயர்லெக், ஃபைன் லெக், ஷார்ட் ஸ்கொயர் லெக் என்று ரகானேவுக்கு பொறி வைத்தனர். லெக் திசையில் புல் ஷாட் கனெக்ட் ஆனால் இருவர், மிஸ்டைம் ஆனால் முன்னால் இருவர் என்று டிராப் செட் செய்யப்பட்டது. முதல் ஷார்ட் பிட்ச் பந்தையே ரகானே சரியாக ஆடவில்லை கொடியேற்றினார், ஆனால் பீல்டர் கைக்குச் செல்லவில்லை. அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தையும் புல் ஆடினார், ஆனால் அந்தப் பந்து ஷார்ட் ஸ்கொயர்லெக்கில் 30 அடிக்குள்ளேயே கேட்ச் ஆக 49 ரன்களில் வெளியேறினார்.

182/6 என்ற நிலையில் டெய்ல் எண்டர்கள்தான் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. ரவிச்சந்திரன் அஸ்வின் பிரமாதமாக ஆடினார், பேக்ஃபுட் பஞ்ச் பவுண்டரி அபாரம். நேராகவும் ஷாட்களை நன்றாக ஆடி 22 ரன்கள் எடுத்து சவுத்தியின் வெளியே செல்லும் பந்தை நோண்டி அவுட் ஆனார். ஜடேஜாவை போல்ட் 15 ரன்களில் வெளியேற்றினார். இஷாந்த், பும்ரா இருவரையும் ஜேமிசன் காலி செய்தார். இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்திய பவுலர்கள் திணறல்:

டெவன் கான்வே, டாம் லேதம் இறங்கினர். நியூசிலாந்து பவுலர்களை விட வேகம் இருந்தாலும் ஸ்விங் இந்திய பவுலர்களுக்குக் கிடைக்கவில்லை, இதற்குக் காரணம் இடது கை பேட்ஸ்மென்கள் என்றால் ரவுண்ட் த விக்கெட்தான் சரி என்ற மூடநம்பிக்கையே. ரவுண்ட் த விக்கெட்டில் பந்துகளின் ஸ்விங் கம்மியாகும் என்பது கூடவா பாரத் அருண் போன்ற பயிற்சியாளருக்கும் ரவி சாஸ்திரிக்கும் தெரியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் பந்து வீச்சு சொத்தையாக மாறியது. ஷமி மட்டுமே ரவுண்ட் த விக்கெட்டில் பயங்கரமாக அச்சுறுத்தினார், அவரை ஆட முடியவில்லை மற்றபடி பும்ரா, இஷாந்த் சர்மா நேர் நேர் தேமாதான். டாம் லேதமும் டெவன் கான்வேயும் கட்டுக்கோப்புடன் நல்ல உத்தியுடன் ஆடி இந்திய பவுலர்களைக் களைப்படையச் செய்யும் உத்தியில் சிறப்பாகச் செயல்பட்டனர்.

4வது வேகப்பந்து வீச்சு இல்லாததால் 50 ரன்களை நியூசிலாந்து ஸ்கோர் கடந்தவுடன் 15வது ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டு வர வேண்டியதாயிற்று. அஸ்வின் மோசமாக ஒரு பந்தை கூட வீசவில்லை, ஆனால் நல்ல பந்துகள் என்று கூறும் பந்துகளையும் அவர் வீசவில்லை. மணிக்கு 90-92 கிமீ வேகத்தில் பந்தை பிளைட் செய்யாமல் வீசிக்கொண்டிருந்தார். பிளைட்தான் பேட்ஸ்மென் மனதில் ஐயத்தை உருவாக்கும், ஆனால் பிளாட்டாக வீசினார், கடைசியில் ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரை நிறுத்தி அட்டாக் செய்ததில் டாம் லேதம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இஷாந்த் சர்மாவின் ஓவர் பிட்ச் பவுண்டரி அடிக்க வேண்டிய பந்தை டெவன் கான்வே (54) தனது வழக்கமான ஹை பிளிக் செய்ய முயன்று மிட் ஆனில் கேட்ச் ஆனார். இந்த விக்கெட் ஒரு லக் தான். டெவன் கான்வேயை ரன் அவுட்தான் செய்ய முடியும் போல் இருந்தது. அதன் பிறகு டெய்லர் இறங்கினார், வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது 101/2. இன்று 4ம் நாள் நியூசிலாந்து சரிவடையும் என்று இந்திய பவுலர்கள் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அதற்கு நேற்று வீசியது போல் வீசமுடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: