டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் பங்கேற்க 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,525 வீராங்கனைகள் இதற்காக விண்ணப்பத்திருந்த நிலையில் அவர்ளில் இருந்து 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து சுமார் 120 வீராங்கனைகள் 5 அணிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். எனப்படும் விமன்ஸ் ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5 அணிகளும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அகமதாபாத்தின் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைனும், மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டெல்லி அணியை ஜே.எஸ்.டபிள்யூ – ஜி.எம்.ஆர். கிரிக்கெட் நிறுவனமும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. அணிகள் உருவாக்கத்தை தொடர்ந்து வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். இந்த ஏலம் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் டபிள்யூ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
டபிள்யூ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு மொத்தம் 1,525 வீராங்கனைகள் விண்ணப்பம் செய்திருந்தனர். பல்வேறு தகுதியின் அடிப்படையில் மொத்தம் 409 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 246 பேர் இந்தியாவையும், 163 பேர் வெளிநாட்டையும் சேர்ந்தவர்கள். 24 வீராங்கனைகளுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நட்சத்திர வீராங்கனைகளான தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா, யு19 உலகக்கோப்பை வின்னர் கேப்டன் ஷெபாலி வர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் டபிள்யூ.பி.எல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மும்பையின் டி.ஒய். பாட்டீல் மற்றும் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket