முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு தொடர்ந்து 4-ஆவது வெற்றி… 8 விக். வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸை வென்றது…

மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு தொடர்ந்து 4-ஆவது வெற்றி… 8 விக். வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸை வென்றது…

மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

3 பந்துகளில் 2 விக்கெட்டுகள் சரிந்து 7.2 ஆவது ஓவரின்போது மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 4 ஆவது வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை ப்ராபோன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து விளையாடியது.

கேப்டன் அலிசா ஹீலி 58 ரன்களும், தஹிலா மெக்ராத் 50 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தனர். கிரன் நேவ்கிர் 17 ரன் எடுக்க மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த உ.பி. வாரியர்ஸ் அணி 159 ரன்களை எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை பேட்டர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் நிதானம் காட்ட, மற்றொரு வீராங்கனை யஸ்திகா பாட்டியா உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை வெளுத்தெடுத்தார்.

27 பந்துகளில் பாட்டியா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேலி மேத்யூஸ் 12 ரன்கள் எடுத்து எக்லஸ்டோன் பந்துவீச்சில் வெளியேறினார். 3 பந்துகளில் 2 விக்கெட்டுகள் சரிந்து 7.2 ஆவது ஓவரின்போது மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் நேட் சிவர் ப்ரூன்ட் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. கேப்டன் கவுர் வழக்கம்போல அதிரடியாக விளையாடி அரைச் சதம் அடித்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்சர் மற்றும் 9 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். நேட் சிவர் 31 பந்துகளில் 45 ரன்கள் சேர்க்க, மும்பை அணி 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 4 ஆவது முறையாக மும்பை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

First published:

Tags: Cricket