டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங் உள்பட முக்கிய ஆட்டக்காரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில், கேப்டன்ஷிப் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் மெகா வெற்றியைத் தொடர்ந்து மகளிருக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தாண்டிலிருந்து ஆரம்பமாகிறது. இதையொட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் இன்று நடத்தப்பட்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா ரூ. 3.40 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ. 1.80 கோடிக்கு மும்பை அணி எடுத்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங், இந்தியாவின் யு 19 உலகக்கோப்பை சாம்பியன் அணியின் கேப்டன் ஷஃபாலி வர்மா, நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளை அணியில் எடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியதாவது- வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக இவ்வளவு தொகை என்று நாங்கள் முன் கூட்டியே நிர்ணயித்திருந்தோம். அந்த விலைக்கு மேல் ஏலத்தில் சென்று விட்டால் அந்த ஆட்டக்காரரை தவிர்த்து விடுவோம். சில வீராங்கனைகளை நாங்கள் மதிப்பிட்டதை விட கூடுதல் தொகை கொடுத்து அணியில் எடுத்துள்ளோம்.
ஏலத்தில் நாங்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் எடுத்த வீராங்கனைகள் குறித்தும் நாங்கள் திருப்தியாக உணர்கிறோம். இந்திய வீராங்கனைகளை நான் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். தங்களது சிறப்பான ஆட்டத்தால் அவர்கள் கிரிக்கெட் உலகை கவர்ந்துள்ளனர். அணியின் கேப்டன் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜோனதன் பேட்டி நியமிக்கப்பட்டுள்ளார். உதவி பயிற்சியாளராக ஹேமலதா கலா பணியாற்றுகிறார். இருவரும் இன்று நடந்த ஏலத்தில் பங்கேற்று அணி நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket